பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

சுந்தர சண்முகனார்


கம்பராமாயணம் - கிட்கிந்தா காண்டம் - பிலம்புக்கு நீங்கு படலம் காட்டில் ஒரு பிலத்தில் தவம்செய்து கொண்டிருந்த சுயம்பிரபை என்பவள், அனுமன் முதலிய வானரர்கள் ஆங்கு வந்து, இராமனுக்காகச் சீதையைத் தேட வந்துள்ளோம் என்று கூற, என்தவம் கைகூடியது - வீடுபேறு கிடைக்கும் என மகிழ்ந்து வானரர்களின் கால்களைத் தூய்மைசெய்து அவர்கட்கு விருந்தளித்தாளாம். பாடல்:

“கேட்டவளும் என்னுடைய கேடில்தவம் இன்னே
காட்டியது வீடுஎன விரும்பிகனி கால்நீர்
ஆட்டிஅமிழ் தன்னசுவை இன்னடிசில் அன்போடு

ஊட்டிமனன் உள்குளிர இன்னுரை உரைத்தாள்” (56)

என்பது பாடல். அடுத்தது, பெரிய புராணத்தில் அப்பூதி நாயனார் வரலாற்றுப் பகுதியில் உள்ளது. அப்பூதி நாயனார் திருநாவுக்கரசரைத் தம் மனைக்கு அழைத்து வந்து விருந்து அளிக்குமுன், நாவுக்கரசரின் கால்களை நீரால் தூய்மை செய்து அந்தத் தண்ணீரைக் குடும்பத்தினர் உட்படத் தலைமேல் தெளித்துக் கொண்டனராம்:

“முனைவரை உள்எழுந் தருளுவித்து
      அவர்தாள் முன்விளக்கும்
புனைமலர்நீர் தங்கள்மேல் தெளித்து

      உள்ளம் பூரித்தார்” (1807)

என்பது பாடல் பகுதி, சுயம்பிரபையும் அப்பூதி நாயனாரும் பிறருக்குச் செய்தனர்; கண்ணகி தன் கணவனை உயர்வாகப் போற்றிச் செய்தாள்.

அடுத்தது ‘மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள் போல்’ என்பது. இன்றும் இலைபோடுவதற்கு முன் கீழே தண்ணீர் தெளிக்கும் வழக்கம் உண்டு. கண்ணகி கையால் தடவித் தரையைத் தூய்மை செய்தாளாம். தூய்மைப் பயனோடு மேலும் இரண்டு பயன்கள் உள்ளன. ஒன்று: