பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

சுந்தர சண்முகனார்


இளங்கே அடிகள் இவ்வாறு பாடியிருப்பது உலகியலுக்கு மாறாயுள்ளது. கோவலனின் பெற்றோர்களும் வெளிப்படையாக வருந்தியிருக்கலாம். கண்ணகியும் வெளிப்படையாக வருந்தியிருக்கலாம் - கண்ணகியின் பெற்றோர்களும் வருந்தி அவளைத் தம் வீட்டிற்கு அழைத்திருக்கலாம். அவளுடைய மாமன் மாமியும் அவளது தாய் வீட்டில் போய் இருக்கச் சொல்லியிருக்கலாம். கண்ணகி தாய் வீட்டிற்குப் போகாமல், கணவன் வீட்டிலேயேதான் இருப்பேன் எனத் துணிந்து கூறியிருக்கலாம். அப்போது நடந்தது இப்போது யாருக்குத் தெரியும்?

எது எப்படியிருந்தாலும், இளங்கோ இவ்வாறு எழுதி இருப்பது பொருத்தமே. இளங்கோ வரலாற்று ஆசிரியர் அல்லர் - இலக்கிய ஆசிரியர் அவர். வரலாற்று ஆசிரியரது கடமை, சிறிதும் ஐயத்திற்கு இடமின்றி - சிறிதும் கற்பனை கலவாது - நடந்ததை நடந்தபடியே - உள்ளதை உள்ள படியே எழுத வேண்டியதாகும். ஆனால் இலக்கிய ஆசிரியர் கற்பனை கலப்பார்; நடந்ததை அடிப்படையாக வைத்துக் கொண்டு, நடக்க வேண்டியதை - மக்கள் குழு பின்பற்ற வேண்டியதை அறிவிப்பார். இங்கே இளங்கோ அவ்வாறு என்ன அறிவித்துள்ளார்? ஒரு குடும்பத்தில் மகன் தன் மனைவியைப் பிரிந்து போய்விடின், அவனுடைய பெற்றோர் தம் மருமகளைத் திட்டலாகாது துன்புறுத்தலாகாது - மருமகளை நோக்கி, நீ கவலைப்படாதே - உன் கணவன் வந்து விடுவான் - நாங்கள் இருக்கிறோம் - அஞ்சாதே - கடைசி வரையும் உன்னைக் காப்பாற்றுவோம் - என்று ஆறுதல் கூறி அன்பாக நடத்தவேண்டும். மருமகளும் அமைதியாக இருக்கவேண்டும் - என்பதை, இந்த வரலாற்று நிகழ்ச்சி வாயிலாக இளங்கோ மக்கள் குழுவுக்குக் குறிப்பாக அறிவித்துள்ளார். இதைப் பின்பற்றுவதே சிறந்ததாகும்.