பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

சுந்தர சண்முகனார்


கொண்டவள் போல் நடித்திருக்க வேண்டும். அதாவது பிகுவு - கிராக்கி பண்ணியிருக்க வேண்டும். அதை விட்டு, அவன் வந்ததும், மாதவிக்குக் கொடுக்க ஒன்றுமில்லை போலும் என்றெண்ணி, சிலம்புகள் உள்ளன - கொண்டு போய்க் கொடுங்கள் என்று சொன்னதும், அவன் மதுரைக்குப் போகலாம் வா என்றதும் - யாரும் அறியாவண்ணம் அவனோடு புறப்பட்டதும் அறியாமையாகும். இது கண்ணகியின் திறமை இன்மையைக் காட்டுகிறது - என்றெல்லாம் கண்ணகி குறை கூறப்படுகின்றாள். ஆனால், கண்ணகி, வா என்றதும் உடனே கணவனுடன் மதுரைக்குப் புறப்பட்டு விட்டதில் ஒருவகைப் பொருத்தம் உள்ளது என்பதைப் புறக்கணித்துவிட முடியாது. அது என்ன என்று காண வேண்டும். இதற்கு, ஒருபுடைக் கருத்து ஒப்புமை காண்டல் என்ற முறையில் மணிமேகலைக் காப்பியத்தில் உள்ள ஒரு மாலைக் காட்சிப் புனைவு துணை செய்கிறது. அது வருமாறு:

ஒரு மாலைக் காட்சி

ஒரு நாள் ஒரு சேவல் அன்னமும் அதன் பெடை அன்னமும் ஒரு தாமரைத் தடாகத்தில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. தாமரை மலரில் இருந்த பெடை அன்னத்தை, மாலை நேரம் வந்ததும், அம்மலர் குவிந்து மூடி மறைத்துவிட்டது. அதை அறிந்த அன்னச் சேவல், அம்மலரின் இதழ்களைக் கிழித்துப் பெடையை அழைத்துக்கொண்டு ஓர் உயரமான தென்னை மரத்தில் ஏறிக்கொண்டதாம். பாடல்: மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை:-

“அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய
தன்னுறு பெடையைத் தாமரை அடக்கப்
பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு

ஓங்கிருந் தெங்கின் உயர்மடல் ஏற” (123 - 126)