பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு

257


என்பது பாடல் பகுதி. அன்னங்கள் தடாகத்தை விட்டு அகன்றதற்குக் காரணம், தடாகத்தின் மேலும் தாமரை மேலும் உள்ள அச்சமாகும். தடாகத்தின் கரையிலுள்ள ஒரு செடியின் மீது அமராமல் தென்னைமேல் அமர்ந்ததற்குக் காரணம், தங்களை அச்சுறுத்திய தண்ணீருக்கு வெகு தொலைவுக்கு அப்பால் போய்விட வேண்டும் என்ற தற்காப்பு முயற்சியாகும். வேறு மரத்தில் ஏறலாகாதா எனின், மற்ற மரங்களினும் தென்னையே உயரமானது - ஆதலின் என்க. தென்னைகளுள்ளும் ‘ஓங்கு இரும்தெங்காம்’ - மிக உயர்ந்த தென்னையாம், மிக உயர்ந்த தென்னையில் பக்க வாட்டத்தில் கைகாட்டிபோல் நீட்டிக் கொண்டிருக்கும் மடலில் அமரக் கூடாதா எனில், தண்ணீருக்கும் தங்களுக்கும் உள்ள இடைவெளி மிகுதி யாயிருக்க வேண்டும் என்பதற்காக, நெட்ட நெடுகமேல் நோக்கிக் கொண்டுள்ள உயர்மடலில் ஏறின என்க. மற்றும், ‘அமர’ என்று கூறவில்லை - ‘ஏற’ என ஏறுமுகத்திலேயே உள்ளதாகக் கூறப்பட்டிருப்பதும் சுவைக்கத்தக்கது.

தங்களை அச்சுறுத்திய தண்ணீர்ப் பகுதியை விட்டு வெகு தொலைவிற்கு அப்பால் போய் விடவேண்டும் எனச் செயல்பட்ட அன்னங்கள் போலவே, கண்ணகியும் செயல்பட்டிருக்கிறாள். அதாவது, தனது நல்வாழ்விற்கு இடையூறாக உள்ள மாதவியை விட்டு வெகு தொலைவிற்கு அப்பால் கணவனைக் கொண்டு சென்று விடவேண்டும் என்ற குறிக்கோளுடன், கணவன் அழைத்ததும் மறாமலும் எவருக்கும் தெரியாமலும் உடனே புறப்பட்டு விட்டாள். புகாரிலேயே இருப்பின் மீண்டும் வேதாளம் முருக்க மரத்தில் ஏறிக்கொள்ளலாம் - அதாவதுமீண்டும் ஒருகால் கோவலன் மாதவிபால் சென்று விடலாம்; “தின்னு ருசி கண்டவரும் பெண்ணு ருசி கண்டவரும் சும்மா இருக்கமாட்டார்கள்” என்பது ஒரு