பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்


மதுரை செல்லும் வரையும் உடனிருந்த துணை கவுந்தியாதலின், இது இட்டுக்கட்டிச் சொல்லி வைத்தாற்போல் நடந்திருக்கிறதே எனச் சிலருக்கு ஐயம் எழலாம். இளங்கோ, இந்தத் துணையைக் கண்ணகிக்காகப் பெண்ணாக்கினார் - கோவலனுக்காகத் துறவி யாக்கினார்-என்பதாக ஓர் அறிஞர் தெரிவித்துள்ளார். பெண்பாலாகிய கவுந்தி துறவியாயில்லாவிடின், ‘பெண் ருசி’ கண்ட கோவலன் வழியில் கவுந்தியையும் ஒரு கை பார்த்து விடுவான் என்று இவர் எண்ணினாரோ!

நம்பலாம்

நெடுவழி செல்பவர்கள், வழியில் ஒரு துணை கிடைப்பின், அவரோடு உரையாடிக் கொண்டு வழி கடப்பது நிகழக் கூடியது தானே. இருவரும் கவுந்தி தங்கியிருந்த இடத்தின் வழியாகச் சென்றனர். கவுந்தி இவர்களைப் பார்த்து, நீங்கள் யார்? எங்கே செல்கிறீர்கள்? ஏன் செல்கின்றீர்கள்? என வினவினார். கோவலன் உள்ளவற்றை உரைத்தான். உடனே கவுந்தி அவன் சொன்னதை ஒத்துக் கொள்ளவில்லை. உங்கள் குறிக்கோள் சரியில்லை; இந்தப் பெண்ணால் கடிய கொடிய காட்டு வழியைக் கடக்க முடியாது என்று சொல்லிப் பார்த்தார். கோவலன் அசைந்து கொடுக்கவில்லை. பின்னர், கவுந்தி சரி செல்லுங்கள். மதுரைக்குச் செல்வதாகச் சொல்கிறீர்கள்; யானும் மதுரைக்குச் சென்று, பெரியோர்களின் நூல்களைக் கேட்டு அருகனை வணங்க வேண்டும் என நெடுநாளாக எண்ணியிருந்தேன்; யானும் வருகிறேன் என்று உடன் புறப்பட்டு விட்டார். மூவரும் மதுரை நோக்கிச் செல்லலாயினர். எனவே, இது இளங்கோவின் கற்பனையன்று - உண்மையாகவே நடந்திருக்கும் என நம்பலாம்.