பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

சுந்தர சண்முகனார்


வைணவராகவும் இருக்கக் காண்கிறோம். உறவினர்கட்குள்ளேயே இப்படியெனில், ஒரு குலத்தாருக்குள்ளேயே இப்படி இருப்பது வியப்பில்லை. வேளாளராகிய நம்மாழ்வார் வைணவர்; வேளாளராகிய நாவுக்கரசர் சைவர். இங்ஙனமெனில், வேறு வேறு குலத்தாரிடையே சமய வேறுபாடு இருப்பதும் வியப்பில்லை, சமணமும் புத்தமும் பேரரசு செலுத்திய அந்தக்காலத்தில், உறவினர்கட்குள்ளேயோ - ஒரு குலத்தாருக்குள்ளேயோ - வெவ்வேறு குலத்தாருக்குள்ளேயே சமணமும் புத்தமும் தனித்தனியாகப் பின்பற்றப்பட்டன. கோவலனும் கண்ணகியும் சமணத் துறவி கவுந்தியுடன் சென்று, சமணச் சாரணர்களையெல்லாம் வழிபட்டிருக்கின்றனர் . சிலம்பில் இது. மணிமேகலையிலோ, மாதவியும் மணிமேகலையும் புத்தத்தைச் சார்ந்த துறவிகளாகி, புத்தமத ஆசானாகிய அறவணரிடம் அறவுரை கேட்டதாகப் பரக்க வெளிப்படையாய்ப் பேசப்பட்டுள்ளது. எனவே, மாதவி பின்பற்றிய மதம் புத்தம் என்பது போதரும்.