பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23. பார்ப்பன உறுப்பினர்களின் பங்கு

பார்ப்பனர்

சிலம்பில், தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண் ஒருத்தியும், மாங்காட்டு மறையவன், கோசிகன், மாடலன் என்னும் பார்ப்பன ஆடவர் மூவரும் ஆகப் பார்ப்பன உறுப்பினர்கள் நால்வர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அமைப்பைக் கண்ணுற்ற ஒருவர் தம் சொற்பொழிவில், இளங்கோ ஆரியத்திற்கு (பார்ப்பனர்கட்கு) நிரம்பத் தம் நூலில் இடம் கொடுத்துள்ளார் என்று சாடினார், இவருக்குப் பதில் தரவேண்டும்.

பிராமணர் என்ற குலத்தினர், தங்களை யாராயினும் பார்ப்பான் - பார்ப்பனர் என்று குறிப்பிட்டால், வருத்தமும் சினமும் கொள்கின்றனர். பார்ப்பனியத்தைப் பிடிக்காதவர்கள் பார்ப்பான் என்கின்றனர். ஆரிய அடிமைகள் பிராமணர் என்கின்றனர். நடுநிலைமையாளர் பார்ப்பான் - பிராமணர் என்ற இரண்டையுமே இடத்திற்கு ஏற்றவாறு மாற்றி மாற்றிப் பயன்படுத்துகின்றனர் - இரண்டுங் கெட்டான் நிலையுடைய இவர்கள் காரியவாதிகள் - பிழைக்கத் தெரிந்தவர்கள்.

தொல்காப்பியம் உட்பட்ட கழக (சங்க) நூல்களில் எழுபத்தைந்து இடங்கட்குமேல், பார்ப்பனர், பார்ப்பார், பார்ப்பான், பார்ப்பணி என்னும் சொற்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கலந்து ஆளப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருமே ஆரியப் பார்ப்பனர் அல்லர்; தமிழகத்தில் பண்டைக் காலத்திலேயே தமிழ்ப் பார்ப்பனர்கள் - தமிழ்