பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. இரட்டைக் காப்பியங்கள்

ஏதேனும் ஒரு வகையில் ஒற்றுமை உடைய - அல்லது - தொடர்புடைய இரண்டை இரட்டை என்பது மரபு. இரட்டைப் பிள்ளைகள், இரட்டைப் புலவர்கள், இரட்டை மாட்டு வண்டி, இரட்டை நகரங்கள் (ஐதராபாத்-செகந்தராபாத்) முதலியன இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.

இவ்வாறு தமிழ்நூல்களுள் இரட்டைக் காப்பியங்கள் என்றால், அப்பெயர், சிலப்பதிகாரம் - மணிமேகலை ஆகிய இரண்டு காப்பியங்களைக் குறிக்கும். கோவலன் - கண்ணகி ஆகியோரைப் பற்றியது சிலப்பதிகாரம். கோவலன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட மாதவிக்கும் கோவலனுக்கும் மகளாகிய மணிமேகலை என்பவளைப் பற்றியது மணிமேகலை. முன்னதை இயற்றியவர் இளங்கோவடிகள். பின்னதை இயற்றியவர் மதுரைக் கூல வாணிகன் சாத்தனார். இனி இரண்டிற்கும் உரிய தொடர்புகளைக் காணலாம்

கோவலன், கண்ணகி, சித்திராபதி, வயந்த மாலை, மாதவி, மணிமேகலை ஆகிய கதை மாந்தர்கள் இரண்டிலும் இடம் பெற்றுள்ளனர்.

ஒன்று மகள் கதை; மற்றொன்று பெற்றோர் கதை. மாதவியின் மகளாகிய மணிமேகலைக்குக் கண்ணகியும் பெற்றோளாக (தாயாக) மாதவியால் குறிப்பிடப்பட்டுள்ளாள். இது ஒருவகை உயர்ந்த பண்பாடு.