பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

299


மூவருள் ஒருத்தி கண்ணகியின் தாய் - மற்றொருத்தி கோவலனின் தாய் - மூன்றாமவள் மாதரி. இம் மூவரும் இறந்ததும் இச்சிறுமியராக மறு பிறவி எடுத்து ஆங்கு வந்திருந்தனர். பின்னர்க் கண்ணகி தேவந்தியின் மீது ஏறி, இளங்கோவின் துறவு பற்றிக் கூறச்செய்தாள்.

பூசாரினி

இத்தகைய தேவந்தி இறுதியில் கண்ணகி கோயிலின் பூசாரினியாக அமர்த்தப் பட்டாளாம்:

“பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து
நித்தல் விழாவணி நிகழ்க என்று ஏவிப்
பூவும் புகையும் மேவிய விரையும்

தேவந்திகையைச் செய்க என்றருளி” (30:151-154)

என்பது பாடல் பகுதி. செங்குட்டுவன், கோயில் செலவிற்கு வேண்டிய நிலம் கொடுத்து, நாள்தோறும் நடைபெற வேண்டிய விழா அணிப் பூசனைக்கு ஏற்பாடு செய்தான்; பின்னர், நறுமணச் சாந்திடுதல், மலர் வழிபாடு (அர்ச்சனை செய்தல்), நறும்புகை எடுத்தல் (தூபம்) முதலிய அன்றாடப் பூசனையைச் செய்யும் பூசாரினியாகத் தேவந்தியை அமர்த்தினானாம்.

கண்ணகிக் கோட்டம் பெண்தெய்வக் கோயில் ஆதலாலும், தேவந்தி கண்ணகிக்குத் தோழியாய் இருந்ததனாலும், பாசண்டச் சாத்தன் கோயிலில் இருந்து பழக்கப்பட்டவள் ஆதலாலும், குடும்பப் பொறுப்போ வேறுவேலையோ இல்லாத கைம்பெண் ஆதலாலும், பார்ப்பணி யாதலாலும், பலமுறை தன்மேல் கடவுள் ஏறிச் சாமியாடியவள் ஆதலாலும், இவளைக் கண்ணகியின் கோயிலுக்குப் பூசாரினியாகச் சேரன் செங்குட்டுவன் அமர்த்தியது பொருத்தமான பேரறிவுச் செயலேயாகும், பெண் தெய்வக் கோயிலுக்கும் ஆடவரே பூசனை செய்யும்