பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

சுந்தர சண்முகனார்


கெளசிகன் குருக்கத்தியின் வாட்டத்தைக் கண்டு மாதவி என்னும் சொல்லால் அதைக் குறிப்பிட்டான் என்பது உண்மையா யிருக்குமா? இது ஐயத்திற்கு உரியது. காப்பியத்திற்கு மெருகு ஊட்டிச் சுவையுண்டாக்குவதற்காக, இளங்கோவடிகள்தான், இருபொருள் அமையச்செய்து விளையாடியுள்ளார் என்று சொல்லக் கூடாதா?

4. மாடலன்

சிலப்பதிகாரத்தின் இடையிலே, அதாவது - முதல் காண்டமாகிய புகார்க்காண்டம் கடந்ததும் இரண்டாம் காண்டமாகிய மதுரைக் காண்டத்தின் இடையிலே இடம்பெற்று, மூன்றாவது காண்டமாகிய வஞ்சிக் காண்டத்தின் இறுதிவரை நடைபோடுபவன் மாடலன் என்பவன்.

இவன் மறை வல்ல அந்தணர்க்கு முதல்வன்; புகாரின் அருகில் உள்ள தலைச்செங்காடு என்னும் ஊரினன்; தெற்கே சென்று குமரி ஆற்றிலே நீராடி, பொதிய மலையை வலம் வந்து, மதுரை கண்டு, கோவலன் - கண்ணகியுடன் கவுந்தியிருக்கும் சோலைப் பள்ளியில் இளைப்பாற வந்து அமர்ந்தான். கோவலன் மாடலனை வணங்கி அவனது வருகை குறித்து வினவியறிந்தான்.

இந்த இடத்திலே, மாடலன் கோவலனை, கருணை மறவன், செல்லாச் செல்வன், இல்லோர் செம்மல் என்றெல்லாம் அவனுடைய பெருமைக்கு உரிய வரலாறுகளை எடுத்துக் கூறிப் புகழ்ந்து பாராட்டினான். கோவலனைச் சிலப்பதிகாரத்தின் கதைத் தலைவனாக (Hero) ஆக்கிய பெருமை மாடலனுக்கே உரியது.

கோவலா! நீ இப்பிறவியில் யான் அறிந்த வரைக்கும் நன்மையே செய்துள்ளாய் - ஆனால் நீ கண்ணகியுடன் இவ்வாறு வந்து துயர் உறுவது பழைய தி ஊழ்ப் பயனே