பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

305



என்று கூறிக் கோவலனுக்கு ஆறுதல் கூறிய உயர்ந்த உள்ளத்தன் மாடலன். இந்த மாடலன் புகாரின் அருகில் உள்ள தலைச்செங்காடு என்னும் ஊரினன் ஆதலின், கோவலன் செய்த நல்வினைகளை நன்கு அறிந்திருந்தான். கோவலன் பெற்றோரையும் கண்ணகியையும் பிரிந்து மாதவி வயப்பட்டுச் செல்வத்தை இழந்தவன் என்பதும் மாடலனுக்குத் தெரிந்துதான் இருக்கும். ஆனால், அதை இப்போது நினைவுபடுத்திக் கோவலனது உள்ளத்தை உடைக்க விரும்பாமையால், நீ நல்வினையே செய்தாய் எனக் கூறி ஆறுதல் செய்தான். அத்தகைய அறிவாளி மாடலன்; அதாவது - சூழ்நிலைக்கு ஏற்பச் செயல்படுபவன்: பேசத் தெரிந்தவன். இவன் தனது கூற்றுக்கு உறுதுணையாக இடையிடையே ஊழ்வினையைப் பயன்படுத்திக் கொள்பவன். ஊழ்வினை நம்பிக்கையால் ஒரு சிறந்த பயன் இருக்கிறதெனில், அது, ஆறுதல் உஆரக்குகிற அமைதி செய்கின்ற இதைத்தவிர வேறு என்ன இருக்க முடியும்?

மாடலனும் கவுந்தியும் கோவலனை நோக்கி, மதுரையின் புறஞ்சேரியில் இனியும் இருத்தல் தகாது; மதுரை நகருக்குள் சென்று உங்கள் இனத்தவர் இருக்கும் இடம் சேரின், மாசாத்துவான் மகன் எனப் பெரிதும் வரவேற்பர் என அறிவுரை கூறினர். இவ்வாறு உய்வழி கூறும் உயரியோ னாகவும் மாடலன் விளங்கினான்.

மாடலன் ஆறுதல் உரையும் அறிவுரையும் கூறுவது அல்லாமல், பழிக்கு அஞ்சுபவனாகவும் பொறுப்புணர்ச்சி உடையவனாகவும் திகழ்ந்துள்ளான். கோவலனும் கண்ணகியும் இறந்த செய்தியை மாடலன் அவ்விருவரின் தாயர்கட்கு அறிவித்தான். அஃதறிந்த தாயர் இருவரும் உள்ளம் உடைந்து உயிர் துறந்தனரல்லவா? தாயர் இருவரும் நாம் அறிவித்ததனால்தானே உயிர் துறந்தனர் என்று மாடலன் மாழ்கிப் பழிக்கு அஞ்சி, அவர்களின் இறப்புக்குத் தான்