பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

சுந்தர சண்முகனார்



கதைச் செயல்களின் இணைப்பிற்கும் கட்டுக்கோப்பிற்கும் இளங்கோவுக்கு இப்படி ஒருவன் தேவைப்பட்டான். அதற்கு இளங்கோ மாடலனைத் தக்க முறையில் படைத்துப் பயன்படுத்திக் கொண்டார்.

ஒருவர் தம் சொற்பொழிவில், இளங்கோ ஆரியத்திற்கு (பார்ப்பனர்கட்கு) நிரம்பத் தம் நூலில் இடம் கொடுத்துள்ளார் என்று சாடினார் - என்பது இந்தத் தலைப்பின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பார்ப்பன உறுப்பினர்கள் உண்மையிலேயே கண்ணகி வரலாற்றில் இடம் பெற்றவர்கள் என்று கொள்ளினும் - அல்லது - இவர்கள் இளங்கோவால் இந்த முறையில் படைக்கப்பட்டவர்கள் என்று கொள்ளினும், சிலம்பில் வரும் இந்த விதமான கதைச் செயல்கட்குப் பொருத்தமானவர்கள் பார்ப்பனர்களே என்பதை நினைவில் கொள்ளின் எல்லாம் சரியாகிவிடும்.

மற்றும், சிலம்புக் கதையோடு தொடர்பில்லாத பராசரன், வார்த்திகன், தக்கிணாமூர்த்தி, கார்த்திகை என்பவரின் வரலாறு நூலிலே இழையோடுகிறது. பராசரன் என்னும் சோழநாட்டுப் பார்ப்பான் சேரனையடைந்து வேண்டிப் பெரும் பொருள் பரிசாகப் பெற்றான். தான் பெற்ற செல்வத்தைப் பாண்டிய நாட்டில் இருந்த வார்த்திகன் என்னும் பார்ப்பனனின் மகனாகிய சிறுவன் தக்கிணாமூர்த்திக்குத் தந்தான். அச்சிறுவனின் ஆரவாரச் செயலைக் கண்டவர்கள், அவனுடைய தந்தை வார்த்திகன் களவாடி வந்து மகனுக்குக் கொடுத்துள்ளான் எனப் பழி கூற, வார்த்திகன் சிறை செய்யப் பட்டான். வார்த்திகன் மனைவி கார்த்திகை மிகவும் வருந்தி வேண்டினாள். பின்னர் உண்மையறிந்த பாண்டியன் அவனைச் சிறைவீடு செய்ததோடு, சிறையிலிருந்த மற்றவரையும் விடுவித்தான்.