பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

சுந்தர சண்முகனார்


மாதரியின் செல்வப் பெருக்கு

ஆயர்குலத்து முதுமகள் (பெரிய மனுஷி) என்பதிலிருந்தே மாதரி மிகுந்த செல்வமும் செல்வாக்கும் உடையவள் என்பது புலனாகும். மற்றும், கோவலன் மாதரி வீட்டிலிருந்து மதுரைக் கடைத்தெருவிற்குப் புறப்பட்ட செய்தியை, கொலைக்களக் காதை - 98 'பல்லான் கோவலர் இல்லம் நீங்கி' என்னும் தொடரால் இளங்கோ குறிப்பிட்டுள்ளார். பல் + ஆன் = பல் ஆன். பல ஆனிரைகளை (மாடுகளை) உடையவர் மாதரி குடும்பத்தினர் என்பது இதன் கருத்து. பண்டைக் காலத்தில் பல மாடுகள் வைத்திருந்தவரே பெரிய செல்வராக மதிக்கப்பட்டார்கள். மாடு என்னும் சொல்லுக்குச் செல்வம் என்னும் ஒரு பொருள் உண்டு. இதற்குப் பல இலக்கியச் சான்றுகள் காண்பிக்கலாம்.

"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை" (400)

என்னும் குறள் ஒன்று போதுமே. இங்கே மாடு என்பதற்குச் செல்வம் என்பது பொருள். கன்னட மொழியிலும், 'தன' என்னும் சொல்லுக்கு மாடு, செல்வம் என்ற பொருள்கள் உண்டு. இலத்தீன் மொழியிலும், Pecunia என்னும் சொல்லுக்கு மாடு, செல்வம் என்னும் பொருள்கள் உள. இதனால், மாடுகள் மிகுதியாக உடைமையே செல்வமாகக் கருதப்பட்டது என்பது தெளிவு. எனவேதான், 'பல் ஆன் கோவலர்' என்பதில் உள்ள 'பல் ஆன்' என்பது, அக்குடும்பத்தின் (மாதரியின்) செல்வ மிகுதியை அறிவித்து நிற்கிறது. மற்றும், மாதரி கண்ணகியை அழைத்துக் கொண்டு, ஆயர்களும் ஆய்ச்சியர்களும் புடைசூழ்ந்துவரத் தன் இல்லம் ஏகினாளாம். இதைக் கொண்டும் மாதரியின் செல்வாக்கை அறிய இயலும்,

கவுந்தியடிகள் கண்ணகியைத்தான் அடைக்கலமாகத் தந்தார் - கோவலனை அடைக்கலமாக்கவில்லையே எனின்,