பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

313



ஆணுக்கு அடைக்கலம் என்று சொல்லத் தேவையில்லை - கண்ணகிக்கு அடைக்கலம் என்பதிலேயே கோவலனும் அடங்குவான்.

மாதரி விருந்தோம்பல்

கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற மாதரி, தம் இனத்தவர் இருக்கும் தன் வீட்டில் தங்க வைக்காமல், மரப்பந்தல் செறிந்ததும் செம்மண் பூசிப் புதுமைப்படுத்தப்பட்டிருப்பதும் காவல் மிக்கதுமாகிய ஒரு சிறிய வீட்டில் இருக்கச் செய்தாள்; புதிய நீரால் குளிக்க வைத்தாள்; என் மகள் ஐயை உனக்குத் தோழியாக இருந்து துணை புரிவாள்; கவுந்தி உங்களை நல்ல இடத்தில் சேர்த்ததால் உன் கணவர்க்கும் கவலை இல்லை - என்று கூறினாள்.

பின், கோவலன் சாவக நோன்பி ஆதலின், நாத்துாண் நங்கையோடு மற்ற பெண்களும் சேர்ந்து பகலிலேயே உணவு ஆக்குதற்கு வேண்டிய நல்ல கலங்களைக் (பாத்திரங்களைக்) காலம் தாழ்த்தாது விரைவில் கொடுங்கள் என்றாள் மாதரி. பாடல்:

"சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்
நாத்துாண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசில் ஆக்குதற்கு அமைந்தநற் கலங்கள்
நெடியாது அளிமின் நீர் எனக் கூற" (18-21)

என்பது பாடல் பகுதி. நாத்துரண் நங்கை = நாத்தனாள் - கணவனுடன் பிறந்தவள் - இங்கே ஐயை. தம் வீட்டிற்கு வந்த புதிய ஆடவரைத் தம் வீட்டுப் பெண்ணுக்கு அண்ணனாகக் கூறுவது ஒருவகை உலகியல் மரபு. இங்கே ஐயைக்குக் கோவலன் அண்ணனாகிறான். கண்ணகி அண்ணியாகிறாள். கண்ணகிக்கோ ஐயை நாத்துாண் நங்கையாகிறாள். இவ்விதம் உறவுமுறை கொள்ளுதல் நாகரிகமான முறையாகும், அடிகள் என்றது கோவலனை,