பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

சுந்தர சண்முகனார்



வடக்கே ஆயர்பாடியில் அசோதை பெற்றெடுத்த பூவைப்பூ நிறமுடைய கண்ணனாக இருப்பானோ இந்தக் கண்ணகி, தொழுனையாற்றின் பக்கம் கண்ணனது துயர் நீங்கச் செய்து அவனை மணந்து கொண்ட நம் குலத்தைச் சேர்ந்தவளாகிய நப்பின்னையாக இருப்பாளோ! இவர்களின் கண்கொள்ளாக் காட்சியை என்னென்று வியந்து மகிழ்வது! என்று மாதவியும் ஐயையும் தம்முள் பேசிக் கொண்டு மகிழ்ந்தனர்.

"ஆயர் பாடியில் அசோதை பெற்றெடுத்த
பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ
கல்லமு துண்ணும் கம்பி, ஈங்குப்
பல்வளைத் தோளியும் பண்டுகம் குலத்துத்
தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை
விழுமம் தீர்த்த விளக்குக் கொல்லென
ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்திக்
கண்கொளா நமக்குஇவர் காட்சி ஈங்கென" (46-53)

என்பது பாடல் பகுதி. ஒவ்வொருவருக்கும் சில நேரங்களில் அவரவர் குலத்திற்கு ஏற்ற சூழ்நிலை - அவரவர் வணங்கும் தெய்வத்திற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகும் போலும். இலம்பு - வேட்டுவ வரி என்னும் பகுதியில், கண்ணகி வேட்டுவர்க்கு ஏற்றவாறு புகழ்ச்சியாக உருவகிக்கப் பட்டாள். இங்கே, ஆயர்குல மாதரியும் ஐயையும் தம் ஆயர் குலத்தைச் சேர்ந்த கண்ணன் உருவிலும் நப்பின்னை உருவிலும் கோவலனையும் கண்ணகியையும் கண்டுள்ளார்கள்.

ஈண்டு, கருத்து ஒப்புமை காண்டல் என்னும் முறையில், சேக்கிழாரின் பெரிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு காட்சியைக் காணலாம். திருவாரூரில் முதல் முதலாகச் சுந்தரரைக் கண்ட பரவை நாச்சியார், இவர் யாராக இருக்கலாம் என்று வியக்கிறார்: