பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328

சுந்தர சண்முகனார்


328 சுந்தர சண்முகனார்

இருபத்தாறு எழுத்துகளையும் தம் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டிருக்கும் மேதைகள் சிலர், களவு - கையூட்டு பெறல் - கையாடல் செய்யும்போது, களவு நூல் பயிற்சி பெற்றவர்கள் களவு செய்வது பற்றிச் சொல்லவா வேண்டும்!

ஒற்றைச் சிலம்பு

களவைக் கண்டிக்கும் யான், களவு செய்வதற்குத் துணை புரியும் வழி ஒன்றை அறிமுகப் படுத்துவதைப் பொறுத்தருள வேண்டும். அதாவது:- பொற்கொல்லன் பாண்டியனிடம் இன்னொரு சான்றுக் கருத்தும் கூறியதாக இளங்கோ எழுதியிருக்க வேண்டும் - ஆனால் அவர் விட்டு விட்டார். இணையான - இரட்டையான நகையை விற்பவர்கள் ஒரே நேரத்தில் இரண்டையுமே விற்பது பெரும் பான்மையான வழக்கு. இரண்டுக் காதுக் கம்மல்களுள் ஒன்றை மட்டும் விற்றால், விற்கும் கம்மலுக்கும் மதிப்பு குறைவு - விற்கப் படாமல் வீட்டில் இருக்கும் ஒற்றைக் கம்மலுக்கும் மதிப்பு குறைவு. பின்னொருகால் ஒற்றைக் கம்மலுக்கு இணையாகும்படி ஒரு புதிய கம்மல் வாங்கினால், இரண்டும் தோற்றத்தில் ஒத்திருப்பது அரிது ஈடு தாழ்த்தியாகவே இருக்கும். ஒற்றைக் கம்மலை மட்டும் விற்பவன் எங்கோ திருடிக் கொண்டு வந்துவிட்டான் என ஐயுற இடம் உண்டு. சிலம்புக்கும் இதே கதைதான். அவன் (கோவலன்) எங்கிருந்தோ திருடிக் கொண்டு வந்திருக்கிறான் என்பதற்கு, அவன் ஒற்றைச் சிலம்பு கொண்டு வந்திருப்பதே போதிய சான்றாகும் எனப் பொற்கொல்லன் பாண்டியனிடம் கூறி மேலும் மெய்ப்பிக்கச் செய்திருக்கலாம். அடியேனுக்குத் தோன்றிய இந்தச் சூதுவாதுக் கருத்து இளங்கோவுக்கும் தோன்றியிருப்பின் இன்னும் சிறப்பாயிருக்கும். அடுத்து மேற் செல்லலாம்.