பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

396

சுந்தர சண்முகனார்



காளியை வேண்டினான். வேண்டுதல் கடுமையா யிருந்தது. காளி தானே குழந்தையாய் மார்பில் மாலையுடனும் கால்களில் சிலம்புகளுடனும் பாண்டியனின் மனைவி வயிற்றிலிருந்து பிறந்தாள்.

பாண்டியன் கணியரை (சோதிடரை) அழைத்து வருங்காலப் பயன் பற்றி வினவினான். இக் குழந்தையால் உனக்கும் மதுரைக்கும் அழிவு உண்டு என்று கூறிக் குழந்தையை அப்புறப்படுத்துமாறு கணியர் அறிவித்தார். உடனே பாண்டியன் ஒரு பெட்டியில் குழந்தையை வைத்து, தொலைவில் உள்ள காவிரியாற்றில் கொண்டுபோய்ப் பெட்டியை விடச்செய்தான். காவிரிக் கரையிலுள்ள புகார் நகர வணிகன் ஒருவன் அப்பெட்டியைக் கண்டெடுத்து உள்ளே யிருந்த குழந்தையைக் கண்டு மகிழ்ந்து கண்ணகி என்ற பெயர் இட்டு வளர்த்து வந்தான். பிள்ளை இல்லாதவன் அவன்.

கண்ணகி பருவம் எய்தியதும் அவ்வூரில் இருந்த கோவலன் என்பானுக்குக் கண்ணகியை மணமுடித்துக் கொடுத்தான் வளர்த்த தந்தை. திருக்கடையூரில் இருந்த மாதவி என்னும் வேசி கோவலன் கழுத்தில் மாலையிட்டாள் அம்மாலையைக் கழற்ற முடியவில்லை. பின்பு கோவலன் மாதவியிடமே தங்கிவிட்டான். மாதவி புறக்கணித்த காலம் வந்ததும் மீண்டும் கோவலன் கண்ணகியை அடைந்தான். இருவரும் மதுரை சென்றனர். அங்கே கோவலன் கொலையுண்டான். காளியாகிய கண்ணகி பாண்டியனையும் மதுரையையும் அழித்தாள்.

இது மிகவும் சுருக்கமான பழங்கதை. இதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது, கண்ணகி பாண்டியன் மகள் என்பதற்குச் சான்று உள்ளது என்பதுதான். காளிதான் கண்ணகியாக வந்தாள் என்பது தேவையில்லை. அது உண்மையும் அன்று.