பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

397



கண்ணகி பாண்டியன் மகள் என்று வஞ்சி மகளிர் கூறியதாகவும் கண்ணகியே கூடக் கூறியதாகவும் பாடியுள்ள இளங்கோ எந்தச் சான்றைக் கொண்டு இவ்வாறு பாடியிருக்க முடியும்?பழங்கதையை அவர் அறிந்தவராதலின் இவ்வாறு பாடினாரெனில், புகாரில் இருந்த மாநாய்கனின் மகள் கண்ணகி என்று மங்கல வாழ்த்துப் பாடல் காதையில் கூறியிருப்பது ஏனோ? இந்தப் பழங்கதைப்படி நடந்தது உண்மையாயின், வளர்ப்பு மகள் என்று கூறாமல், வாளா மகள் எனக் கொள்ளும்படிக் கூறினாள் எனக் கொண்டு அமைதி அடைவதைவிட வேறு வழியில்லை. இளங்கோ சிலப்பதிகாரம் எழுதுவதற்கு முன்பே இந்தக் கதை நாட்டில் நடிக்கப்பட்டிருந்ததை அறிந்திருப்பாராதலால், கண்ணகி பாண்டியன் மகள் என்ற குறிப்பைத் தக்க இடத்தில் புகுத்தியுள்ளார் என்றும் கொள்ளலாம். தன் சிலம்பு காரணமாகப் பாண்டியன் இறந்து விட்டதால், அவன் மீது பரிவுற்றுத் தான் அவன் மகள் என்றும் கூறியிருக்கலாம் கண்ணகி.

இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நெடுங்கதைகள், பெரும்பாலும், நாட்டில் நடிக்கப்பட்ட பின்பே ஏட்டில் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த நாடகங்கள், அரசர் முதலிய மேட்டுக் குடியினர் முன்னே நடிக்கப்பெற்ற வேத்தியல் மேடைக் கூத்தாகவும் இருக்கலாம்; மற்றும், பொதுமக்கள் முன்னே நடிக்கப்பெற்ற பொதுவியல் தெருக் கூத்தாகவும் இருக்கலாம்.

இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் அடிப்படையில், கிரேக்கப் பெரும்புலவராகிய ஃஒமர் எழுதிய ‘இலியடு’ என்னும் காப்பியத்திற்குச் செல்வோம்: இந்தக் காப்பியத்தில் இடம் பெற்றுள்ள பல பகுதிகள், யுகோசுலோவகியா நாட்டிலுள்ள சிற்றூர்களில் எளிய மக்களாலும் பாடப்பட்டவை என்பதாக ஒரு கருத்து