பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

398

சுந்தர சண்முகனார்



சொல்லப் படுகின்றது. சிலப்பதிகார காப்பியத்தின் அமைப்பும் இது போன்றதாக இருக்கலாம் அல்லவா?

ஒற்றை முலைச்சி

நற்றிணையில், தலைவன் - தலைவி - பரத்தை ஆகியோர் தொடர்பான ஒரு பாடலில், உவமையாக, ஒரு முலை அறுத்த பெண்ணொருத்தி குறிப்பிடப்பட்டுள்ளாள்:

“ஏதி லாளன் கவலை கவற்ற
ஒருமுலை அறுத்த திருமா வுண்ணி”
(216:8,9)

என்பது பாடல் பகுதி. ஒருவனால் ஏற்பட்ட கவலை வருத்தியதால், ஒரு முலையை அறுத்துச் செயலாற்றிய திருமாவுண்ணி என்பவள் கண்ணகியாக இருக்கலாம் என ஒரு கருத்து உய்த்துணரப் படுகிறது.

மற்றும், கொடுங்கோளூரில் கோயில் கொண்டுள்ள பகவதி அம்மனுக்கு ஒரு முலைச்சி' என்ற பெயர் இன்றும் வழங்கப் பெறுகிறது.

எனவே, நாட்டில் நடமாடும் கதைகளின் அடிப்படையில் காப்பியங்கள் எழுவது இயற்கையாகும்.

பேகன் - கண்ணகி மயிலுக்குப் போர்வை போர்த்திய பேகன் என்னும் வள்ளல் தன் மனைவியை நீக்கியதாகவும், அவள் அரண்மனை வாயிலில் நின்று - மார்பகம். நனையும். அளவிற்குக் கண்ணீர் சொரிந்த தாகவும் கபிலர் பாடிய பாடல் ஒன்று (143) புறநானூற்றில் உள்ளது.

கைவள் ளீகைக் கடுமான் பேக (6)
யார்கொல் அளியன் தானே..... (7)
உகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள் (13)
முலையகம் நனைப்ப விம்மிக்...... (4)
குழல் இனைவதுபோல் அழுதனள் பெரிதே”

(15)