பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

407


உணவுப் பொருள்கள் முதல் நாள் பிற்பகல் கொடுக்கப் பட்டன - மாலையே - உணவு கொண்டனர் என்பதுதான் சரி. முதல் நாள் மாலை கொலை-மறுநாள் மாலை கண்ணகி கணவன் உடலைக் கண்டாள் - என்று கூறும் வீரபத்திரன்,

“வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார் குழல்மேல்
கொண்டாள் தழீஇக் கொழுநன்பால் காலைவாய்ப்,
புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க்
கண்டாள் அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம்”

(19: 31-38)

என்னும் பகுதியில் உள்ள முதல் இரண்டு அடிகட்குத் தம் கொள்கைக்கு ஏற்பப் பொருள் கூறுகிறார். அதாவது:-காலை என்பதற்கு, காலை நேரம் (Morning), காலம், பகல் என்னும் பொருள்கள் உண்டு. இங்கே, காலை என்பது பகல் என்னும் பொருளில் உள்ளது; எனவே, முதல் நாள் பகல் கோவலன் கொலையுண்டான் என்று கூறுகிறார். காலை என்பதற்குப் பகல் என்ற பொருள் உள்ளதாயின், அது முதல் நாள் பகலை மட்டுமே குறிக்குமோ? இரண்டாம் நாள் பகலைக் குறிக்காதா? எனவே, அவரது கூற்று பொருந்தாது.

பகலில் புணர்ச்சியா?

மேலும் வீரபத்திரன் ஒரு கேலிக் கூத்தான கருத்து கூறியுள்ளார். அதாவது முதல் நாள் மாலை உணவு கொண்டு 5 மணிக்குச் சிலம்பு விற்கப் புறப்பட்ட கோவலன், தான் புறப்படுவதற்கு முன் கண்ணகியோடு உடலுறவுகொண்டான் என்று கூறி நம்மை லியப்பில் ஆழ்த்துகிறார். கோவலனும் கண்ணகியும் புணர்ந்த மயக்கத்தில் கோவலனது தலையில் இருந்த மாலை கண்ணகியின் கூந்தலில் நழுவி விழுந்து விட்டது போல் கூறுகிறார். அங்ஙன மெனில், இவர்களின் புணர்ச்சி பிற்பகல் 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் நடந்திருக்க வேண்டும்.