பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

408

சுந்தர சண்முகனார்


இது என்ன வேடிக்கை பகலிலே புணர வேண்டுமா? கோவலன் கடைத் தெருவிற்குச் சென்று திரும்பிய பின் இரவில் புணரலாம் என்று எண்ணியிருக்க மாட்டார்களா? கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போய் விடும்? “காய்ந்த மாடு கம்பில் பாய்ந்தாற்போல்” என்ற பழமொழி ஒன்றுண்டு. கோவலன் காய்ந்த மாடா? அவன் காமக் கடலில் முழுகி எழுந்து அலுத்துப் போனவனாயிற்றே. மற்றும், கோவலனும் கண்ணகியும் இந்தக் காலத்துத் தங்கும் விடுதியிலா (ஒரு லாட்ஜிலா) தங்கி இருந்தனர்? இந்தக் காலத்தில் ஒருவன் அயல் பெண்ணைப் புணர்ச்சிக்காகவே பகலில் அழைத்துக் கொண்டு வந்து ஒரு தங்கும் விடுதியில் (லாட்ஜில்) அறையெடுத்துத் தங்கி விவகாரத்தை முடித்துக் கொள்வதுண்டு. கோவலன்-கண்ணகி நிலை இன்னதன்றே? மற்றும், வந்த வழியில் ஒருத்தி வயந்தமாலை வடிவத்தில் வந்து தன்னை மயக்கிய ஒரு வாய்ப்பைக் (ஒரு கிராக்கியைக்) கோவலன் உதறித் தள்ளியவனாயிற்றே! அவன் பகலிலா புணர வேண்டும்? துயருற்றுக் கிடக்கும் கண்ணகிக்கும் கோவலனுக்கும் பகலிலேயே புணர்ச்சி ஒரு கேடா? இருவரது தாடி பற்றி எரியும்போது மற்றொருவன் பிடிக்கு நெருப்பு கேட்டானாம். அதுபோல், வருந்திய நிலையில் உள்ள அவர்கட்குப் பகலிலேயே படுக்கை விரித்துப் போடலாமா? இரவில் போடலாமே!

உணவு - கொலை நேரங்கள்

கோவலன் கொலையுண்டது முதல் நாள் மாலை நேரத்தை அடுத்த முன்னிரவு 7 மணி என வீரபத்திரன் கூறுகிறார். இளங்கோ பாடியுள்ளபடி நோக்கின், முதல் நாள் மாலை நேரத்தை அடுத்த 7 மணி அவன் உணவுண்ட நேரமாகும். மாதரி கண்ணகியையும் கோவலனையும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற நேரம்,