பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

417



“மன்னும்மாலை வெண்குடையாள்
    வளையாச் செங்கோல் அது ஒச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
    புலவாய் வாழி காவேரி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
    புலவா தொழிதல் கயல் கண்ணாய்
மன்னும் மாதர் பெருங் கற்பென்று
    அறிந்தேன் வாழி காவேரி”

என்பன அவை. சோழ மன்னன் வடக்கில் உள்ள கங்கையையும் (கங்கை ஆற்றையும்) தென் முனையில் உள்ள கன்னியையும் (குமரி ஆற்றையும்) புணர்ந்தாலும் காவேரி (காவேரி ஆறு) வருந்தாள் - ஊடல் கொள்ள மாட்டாள் - என்பது, இப்பாடல்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கானல் வரிக் காதையில் உள்ள மற்ற பாடல்கள் அகப் பொருள்துறைக் கருத்துகள் கொண்டவையாகும். இச் செய்திகள் இந்த (எனது) நூலில், ‘காப்பியத்தில் காணல் வரியின் இடம்’ என்னும் தலைப்பில் விளக்கப்பட்டுள்ளன.

முதல் இரண்டு பாடல்களும், கோவலன் கண்ணகியை உள்ளத்தில் நினைத்துக்கொண்டு பாடியதாக தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் கூறியுள்ளார். அதாவது, கோவலன் மாதவியையோ - மற்ற பெண்களையோ புணர்ந்தாலும் கண்ணகி அவன்பால் ஊடல் கொள்ள மாட்டாள் என்பது தெ. பொ. மீ.யின் கருத்தாக இருக்கலாம். கண்ணகியின் உயரிய பண்பை மாதவிக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு பாடியதாகவும் சொல்லப்படுகிறது.

பிற பெண்களைப் புணரினும் கண்ணகி வருந்தாள் எனக் கண்ணகியை காவேரியாக உருவகித்துப் பாடுவதென்றால், இதைக் கண்ணகியின் முன் பாடவேண்டும்.