பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

423


வில்லை. வாளா மாதவியை மிரட்டுவதற்காகவும் - குத்தலாகவும் - குறும்பாகவும் - விளையாட்டாகவுமே கோவலன் பாடினான். ஆடவர்க்கு இப்படியொரு வழக்கம் உண்டு. எடுத்துக்காட்டு ஒன்று தருவேன்:-

என் நண்பர் ஒருவர் தம் மனைவியிடம் கூறியதாகப் பின் வருமாறு சொன்னாராம். “நான் ஸ்கூட்டரில் செல்லும் போது அழகிய பெண்களைக் கண்டால் என் ஸ்கூட்டர் மெதுவாகப் போகிறது” - என்று சொன்னாராம். இது,மனைவியை விடைப்பதற்காகக் குறும்பாக - விளையாட்டாகக் கூறியதே யாகும். அதற்குப் பதில் - ஏட்டிக்குப்போட்டியாக அவருடைய மனைவி, “நான் தெருவில் நடந்து செல்லும் போது அழகிய ஆடவரைக் காணின் என் கால்கள் மெதுவாக நடக்கின்றன” - என்று கூறினாரா? இல்லை - இல்லவே யில்லை. இவ்வாறு பல எடுத்துக் காட்டுகள் தரலாம். குடும்பக் குலப் பெண்கள் யாரும் இந்நாள் வரை இதுபோல் கூறுவது கிடையாது. இனி எப்படியோ? ஆனால், மாதவி, பதிலுக்கு. ஏட்டிக்குப் போட்டியாக, தான் மற்றோர் ஆடவனை உள் நிறுத்திக் கூறுவதுபோல் கானல்வரி பாடி அவளது குலப்பிறப்பின் தன்மையைக் (சாதிப் புத்தியைக்) காட்டிவிட்டாள்.

மாதவி பாடியதும் உண்மையன்று. கோவலன் இறந்ததும் துறவியானதிலிருந்து மாதவியின் தூய உள்ளம் புலனாகலாம். எனவே, கானல் வரிப்பாடல் காப்பியச் சுவையை மிகுத்ததோடு, கனகவிசயர் முடித்தலையில் கல்லேற்றியதுக்கு இயற்கையான - தற்செயலான ஒரு காரணமாய் அமைந்தது என்ற அளவில் நாம் அமைதி கொள்ளல்வேண்டும்.

இவ்வாறு சிலப்பதிகாரத்தை ஆராய ஆராயக் காப்பியச் சுவை நயம் தித்திப்பதைக் காணலாம்.

நெஞ்சை அள்ளும் சிலம்போ சிலம்பு!