பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

சுந்தர சண்முகனார்


மறையவனின் கண்கள் அவன் மனத்தை உறுத்தினவாம் - என்னும் பொருளில் உள்ள “என் கண் காட்டு என்று உளம் கவற்ற வந்தேன்” என்னும் பகுதி சுவைக்கற்பாலது.

மாங்காட்டு மறையவன் மேலும் வழியில் குறிப்பிட்ட ஒரு மலையைச் சுட்டிக் கூறுகின்றான். ஓங்கி உயர்ந்த அம்மலைப் பகுதியில் உள்ள நெடியோனாகிய திருமாலை வணங்கி, உள்ளத்தில் அவன் திருவடிகளைப் பதித்து, அம் மலையை மூன்று முறை சுற்றி வந்து தொழ வேண்டுமாம்.

“ஓங்குயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது
சிந்தையில் அவன்தன் சேவடி வைத்து
வந்தனை மும்முறை மலைவலஞ் செய்தால்...”

(105-107)

என்பது பாடல் பகுதி. திருமால் உயர்ந்தோன் எனக் குறிக்கப்பட்டுள்ளார். உலகை அளக்க நெடுவிக்கிரம வடிவம் எடுத்ததால், திருமாலை நெடியோன் என்றும் உயர்ந்தோன் என்றும் கூறுதல் மரபு, கோயிலையோ - மலையையோ மற்றும் இன்னோரன்ன பிறவற்றையோ மூன்று முறை சுற்றும் மக்களின் வழக்கம் இங்கே சுட்டப்பட்டுள்ளது.

கொற்றவை

கோவலன் முதலிய மூவரும் வழி கடந்து கொற்றவை கோட்டம் ஒன்றை அடைந்தனராம்; கொற்றவை நெற்றிக் கண் உடையவளாம்; விண்ணோர் வணங்கும் பெண் தெய்வமாம். வான நாட்டாளாம்; ஐயை எனப்படுபவளாம்.

“விழிநுதல் குமரி விண்ணோர் பாவை
மையறு சிறப்பின் வான நாடி
ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்கென்”

(214-216)