பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

45


தந்தைமார்களுள் கோவலன் தந்தையாகிய மாசாத்துவான் புத்தமதத்தில் சேர்ந்தார்; கண்ணகியின் தந்தை மாநாய்கன் சமண மதத்தில் சேர்ந்தார். எனவே, மதங்கள் உறவைக் கெடுக்கவில்லை என்பது போதரும். இக்காலத்திலும், உற வினர்களுக்குள் ஒரு குடும்பத்தார் சைவராகவும் மற்றொரு குடும்பத்தினர் வைணவராகவும் இருப்பதைக் காணலாம்.

இளங்கோ அடிகள் எதிலும் அகப்பட்டுக் கொள்ளாமல் மிகவும் விழிப்பாய் வேலை செய்திருக்கிறார். மணிமேகலை எழுதிய சாத்தனார் பச்சையாக வெளிப்படையாகப் புத்தம் பரப்பியுள்ளார். இளங்கோ எந்த மதத்திற்கு முதன்மை கொடுத்துள்ளார் எனில், சமணத்திற்கே எனப் பதில் இறுக்கலாம். சாரணர் வாயிலாகவும் கவுந்தி வாயிலாகவும் சமணம் பரப்பியுள்ளார். எனவே, அவரைத் தனிப்பட்ட முறையில், சமணச் சார்புடையவர் என்று கூறுகின்றனர். அவருடைய தமையன் சேரன் செங்குட்டுவனோ சைவச் சார்புடையவனாகப் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள் ளான். இருப்பினும் எல்லா மதங்கட்கும் இடம் கொடுத்துள்ளான்.

சாத்தனார் தனிப்பட்டவராதலின் வெளிப்படையாகப் புத்தம் பரப்பினார். இளங்கோ மன்னர் குடும்பத்தினர் - ஆட்சியில் உள்ள செங்குட்டுவனின் இளவல் - எனவே, இவர், மதப் பொதுவுடைமையையே மக்களிடையே வைத்துச் சென்றுள்ளார்.