பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

59


கண்ணகியே! நாம் இவ்வாறு துன்புறுவதற்குக் காரணம் யாராவது செய்த மாயமா யிருக்கலாமோ அல்லது நமது பழைய வலிமையுடைய ஊழ்வினையா யிருக்கலாமோ! யான் உள்ளம் கலங்குகிறேன்-ஒன்றும் புரியவில்லை-என்று கூறினான்.

“மாயங் கொல்லோ வல்வினை கொல்லோ

யான் உளம் கலங்கி யாவதும் அறியேன்” (61, 62)

என்பது பாடல் பகுதி.

பொற்கொல்லன் பாண்டிய மன்னனிடம் சென்று, சிலம்பு திருடிய கள்வன் அகப்பட்டுக் கொண்டான் என்று கூற, கோவலனுக்கும் பாண்டியனுக்கும் பழைய தீய ஊழ் வினை விளைவுதரும் காலமாயிருந்ததால், அந்தக் கள்வனைக் கொல்லுக என்று கூறினான். அவ்வாறே, பழைய திய ஊழ்வினையாகிய வலையிலே சிக்கிக்கொண்டிருந்த கோவலன் கொல்லப்பட்டான் பாடல்:

“வினைவிளை கால மாதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரா னாகி” (148, 149)

“தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த

கோவலன் தன்னைக் குறுகின னாகி” (156, 157)

என்பது பாடல் பகுதி.

கோவலன், பழைய தீய ஊழ்வினை உருத்தியதால் பாண்டியனது செங்கோல் வளைந்து கொடுங்கோல் ஆக, வெட்டப்பட்டுக் கீழே விழுந்தான்.

“காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்

கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென்” (216, 217)

கொலைக் களக் காதையின் இறுதியில் பின்வரும் வெண்பா உள்ளது.