பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

சுந்தர சண்முகனார்


தால் எமன் குழந்தையின் உயிரைக் கொண்டு சென்றானாம்.

“மாலதி என்பாள் மாற்றாள் குழவியைப்
பால்சுரங் தூட்டப் பழவினை உருத்துக்

கூற்றுயிர் கொள்ளக் குழவிக்கு இரங்கி” (74-76)

இவ்வாறு ஊழ் வினை சிலப்பதிகாரத்தில் ஒரு (சுமார்) இருபது இடங்கட்கு மேல் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரை காதையில், மதுரையின் 57 தெய்வமாகிய மதுராபதி கண்ணகியிடம், கோவலனது முன் பிறப்பு வரலாறு கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது:

கலிங்க நாட்டில் உள்ள சிங்கபுரம் என்னும் பகுதியில் வசு என்பவனும், கபிலபுரம் என்னும் பகுதியில் குமரன் என்பவனும் அரசாண்டு கொண்டிருந்தனர். இவர்கள் பகை கொண்டு. ஒருவரை ஒருவர் தோற்கடிக்க முயன்றனர். இரு பகுதிக்கும் இடையே ஆறு காத எல்லைக்குள் யாரும் இயங்குவது இல்லை. இந்நிலையில், சங்கமன் என்னும் பன்மணி நகை வாணிகன் தன் மனைவி நீலி என்பவளோடு, கபிலபுரத்திலிருந்து கள்ளத்தனமாகச் சிங்கபுரம் சென்று நகை மணி வணிகம் புரிந்து கொண்டிருந்தான். அப்போது, சிங்கபுரத்து மன்னனின் பணியாளனாகிய பரதன் என்பவன், சங்கமன் பகைவனது ஒற்றன் எனத் தங்கள் மன்னனிடம் பொய்யாகக் காட்டிக் கொடுத்துக் கொல்லச் செய்து விட்டான். இறந்து போன சங்கமனின் மனைவியாகிய நீலி என்பாள் பெரிதும் வருந்திப் பதினான்காம் நாள் ஒரு மலை மீது ஏறி நின்று, என் கணவன் கொல்லப்பட்டதற்குக் காரணமாக இருந்தவன், அடுத்த பிறவியில் பொய்க் குற்றம் சாட்டப்பட்டுக் கொலை செய்யப்படுவானாக. அவன் மனைவி யான் அடைந்துள்ள நிலையை அடைவாளாக எனக் கெடுமொழி (சாபம்) இட்டு இறந்து போனாள். அந்தப் பரதன் என்பவனே கோவலனாகப் பிறந்தான்;