பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

சுந்தர் சண்முகனார்


அவ்வரசர்க்கும் அவ்வூருக்கும் தீங்கு நேர்ந்தது. அந்தத் தீங்கு மிகவும் கொடியதாதலின் மேலும் அதைப் பற்றி நின்னிடம் கூற மனம் வரவில்லை. பின்னர் யானும் என் கணவரும் உயர்ந்த நிலை அடைந்தோம். அதைக் கூறின் நகைப்பிற்கு இடமாகும் - என உரைத்தாள். இது கண்ணகி கண்ட கனா ஆகும். இனிப் பாடல் பகுதி வருமாறு:

“கடுக்கும் என்நெஞ்சம் கனவினால் என்கை
பிடித்தனன் போயோர் பெரும்பதியுள் பட்டோம்
பட்ட பதியில் படாததொரு வார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேளிட்டு என்றன்மேல்
கோவலற் குற்றதோர் தீங்கென் றதுகேட்டுக்
காவலன் முன்னேயான் கட்டுரைத்தேன் காவலனோடு
ஊர்க்குற்ற தீங்குமொன் றுண்டால் உரையாடேன்
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம்
உற்றேனோ டுற்ற உறுவனோடு யானுற்ற

நற்றிறம் கேட்கின் நகையாகும்..” (45-54)

என்பது பாடல் பகுதி.

இடுதேள் இடுதல் என்றால், ஒருவர் மேல் தேளை இடுவது போன்ற கொடுமையைச் சுமத்தலாகும். சிலர், மெழுகினாலாவது வேறு ஏதாவதொன்றினாலாவது செய்யப்பட்ட பொய்த்தேளை ஒருவர்மேல் போட்டு அஞ்சச்செய்வதும் உண்டு. இங்கே இடுதேள் என்பது, தேள் போல் தீமை தரும் கொடும் பழி என்பதைக் குறிக்கும்.

உலகியலில், ஒருவர் கெட்ட கனா காணின் அதை வெளியிட நாணுவதோ - அஞ்சுவதோ உண்டு. பிறர்க்குக் கேடு நேர்ந்ததாகக் கண்ட கனவைக் கூறுவதற்குப் பெரும்பாலும் மக்கள் ஒருப்படார்.

இங்கே கனாவினால் உய்த்துணரப்படுவன: இடுதேள் இடுதல்போல் கோவலன் மீது திருட்டுக் குற்றம் சுமத்துவ-