பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்போ சிலம்பு!

71


இரவு வில்லிடும், பகல்மீன் விழும்,
   இரு நான்கு திசையும் அதிர்ந்திடும்
வருவ தோர் துன்பம் உண்டு

   மன்னவர்க் கியாம் உரைத்து மென”
(9.12)

என்பது பாடல் பகுதி. ஒரே செய்தி பாடலில் இருமுறை கூறப்பட்டுள்ளது. ஒன்று தோழி அறிவதற்காக - மற்றொன்று, மன்னன் முதல் மற்றவரும் அறிவதற்காகும்.

செங்கோலும் வெண்குடையும் படுக்கையாய் விழவில்லையாம் - தலைகீழாய் மறிந்து வீழ்ந்தனவாம். வாயிலில் ஆராய்ச்சி மணி கட்டப்பட்டிருக்கிறதே தவிர, மன்னனின் ஆட்சியில் ஒரு குறையும் இல்லாததால் இது வரையும் யாராலும் அடிக்கப்படா திருந்த மணியின் ஒலி, கனவில் அடிக்கப்பட்டுக் கேட்கப்பட்டதாம். உள்ளம் நடுங்கும்படி மணி நடுங்கிற்றாம். மணி அசைந்து ஒலி எழுப்பியது என்னாமல், நடுங்கியதாகக் கூறப்பட்டிருப்பது பொருள் பொதிந்ததாகும்.

‘இரவு வில் இடும்’ என்பதை இக்காலத்தார்க்கு விளக்குவது எளிது. பகலில்தான் வானவில் தோன்றுவது வழக்கம். அன்று கனவில் இரவில் வானவில் தெரிந்ததாம். முற்பகலில் கீழ்த்திசையில் ஞாயிறு காய்ந்து கொண்டிருக்கும் போது அதற்கு நேர் எதிரில் மேற்கே மழை பெய்யின், ஞாயிற்றின் ஒளி மழையை ஊடுருவி அப்பால் செல்ல ஒளிச் சிதறல் ஏற்பட்டு அதற்கும் மேற்கே பல வண்ண வடிவிலே வில் போன்று வளைந்த ஓர் அமைப்பு தெரியும். பிற்பகலில் மேற்குத் திசையில் ஞாயிறு தெரியும்போது அதற்கு நேர் எதிரில் கிழக்கே மழை பெய்யின், ஞாயிற்றின் ஒளி மழையை ஊடுருவி அப்பால் செல்ல ஒளிச் சிதறல் ஏற்பட்டு அதற்கும் கிழக்கே பல வண்ண வடிவிலே வில் போன்று வளைந்த ஓர் அமைப்பு தெரியும். இதையே வானவில் என்கின்றனர்.