பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

81


“பல்லான் கோவலர் இல்லம் நீங்கி
‘வல்லா நடையின் மறுகில் செல்வோன்’
இமில்ஏறு எதிர்ந்தது இழுக்கென அறியான்

தன்குலம் அறியும் தகுதியன் றாதலின்” (98-01)

என்பது பாடல் பகுதி. கவலையோடு தளர்ந்த நடையுடன் தெருவில் சென்றான் என்பது, வல்லா நடையின் மறுகில் செல்வோன் என்னும் தொடரின் உருக்கமான கருத்தாகும்.

உலகியலில் சிலர், ஒரு வேலையின் நிமித்தம் வெளியில் புறப்பட்டுச் செல்லுங்கால், எதிரில் தீய குறிகள் தென்படின் வீட்டிற்குத் திரும்பி வந்துவிடுவதுண்டு. ஆனால் கோவலனது தலையெழுத்து வேறுவிதமாயிருந்தது. என் செய்வது!

திருடர்கள் திருடச் செல்லும்போது நிமித்தம் பார்ப்பார்களாம். பெறுதற்கரிய பெரும் பொருள் எளிதில் கைக்குக் கிடைக்கும்போல் தோன்றினும், புறப்படும்போது நிமித்தம் தீயதாயிருப்பின் திருடச் செல்ல மாட்டார்கள் என்னும் செய்தி கொலைக் களக் காதையில் கூறப்பட்டுள்ளது.

“நிமித்தம் வாய்த்திடின் அல்லது யாவதும்

புகற்கிலர் அரும்பொருள் வந்துகைப் புகினும்”(178-179)

என்பது பாடல் பகுதி. திருடர்களும் சகுனம் பார்ப்பார்களா என வியக்கத் தோன்றலாம். மற்றவரினும் திருடர்களே கட்டாயம் சகுனம் பார்க்க வேண்டும். ஏனெனில், திருடர்கட்கு அந்தக் காலத்தில் சாவு ஒறுப்பு (மரண தண்டனை) கொடுக்கப்பட்டதால், தாங்கள் அகப்பட்டுக் கொள்ளாமல் வெற்றியுடன் திரும்பி வரவேண்டும் என்பதற்காக அவர்கள் கட்டாயம் சகுனம் பார்ப்பார்களாம்.

ஆய்ச்சியர் குரவை

ஆயர்பாடியில் பல தீய நிமித்தங்கள் நடைபெற்றதாக இடைக்குல மடந்தை மாதரி தன் மகள் ஐயையோடு கலந்து உரையாடுகிறாள். அந்தத் தீய நிமித்தங்களாவன: