பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல காலங்களில் நடைபெற்ற பல்வேறு கதைச் செய்திகள் சூழ்நிலைக்கு ஏற்ப இடம் பெற்றிருப்பதால், பொய்க் கற்பனைகள் கொண்டது சிலம்பு எனச் சொல்லத் தோன்றினாலும், எத்தனையோ வேறு காப்பியங்களை நோக்க, சிலம்பில் பொய்க் கற்பனைகள் குறைவே. முற்றிலும் கற்பனை கலவாது காப்பியம் எழுதுவது அரிது. அவ்வாறு எழுதின் அது காப்பியமாகாது - வரலாற்று நூலாகும்; ஆனால் இது காப்பியம்.

குடிமக்கள் காப்பியமாகத் திகழும் சிலம்பில் இலக்கிய நயத்திற்குக் குறைவே இல்லை. கலைகள் பற்றித் தனி நூல் எழுதுதல் வேண்டும். -=

நூல்வடிவம்

முன்னமேயே சிலப்பதிகாரம் பற்றிப் பல திறனாய்வு நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. காலம் கடந்து இப்போது இந்நூலை யான் எழுதியது ஏன்? பல ஆண்டுகட்கு முன், யான் தமிழ் எம்.ஏ. தேர்வுக்குப் படித்த போது, இரண்டு குறிப்புச் சுவடிகள் (Note Books) நிறையக் குறிப்பெடுத்து வைத்தேன். இடையில் பல ஆண்டுகள் மூளைக்கட்டிப் பிணியால் யான் படுக்கையில் கிடந்ததாலும், இந்தக் குறிப்புச் சுவடிகள் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் மறைந்து கிடந்ததாலும், குறிப்புகட்கு நூல் வடிவம் தர இயலவில்லை. அண்மையில் வேறொன்றைத் தேடும் முயற்சியின்போது, பரண்மேல் இருந்த தாள் கட்டு ஒன்றிலிருந்து இக் குறிப்புச் சுவடிகள் தற்செயலாகக் கிடைத்தன. இந்தக் குறிப்புகளை ஓரளவு சுருக்கியும் புதிய கருத்துகள் சில சேர்த்தும் இந்நூல் வடிவைப் படைத்தேன். குறிப்புகளை வீணாக்கக் கூடாதல்லவா?

தமிழ் வித்துவான், தமிழ் எம்.ஏ. ஆகிய தேர்வுகட்குப் படித்த போதினும், கல்லூரியில் பாடம் நடத்திய போதினும், இப்போதே, சிலப்பதிகாரத்தை ஓரளவாவது முறையாகப் படித்ததான உளநிறைவு ஏற்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் கடக்க அரிதாகிய பெருங்கடல். அதிலிருந்து சில முத்துகளே இந்நூலில் அறிமுகம் செய்யப் பெற்றுள்ளன. பக்கக் கட்டுப்பாடும் நினைவிருக்கிறது.

திறனாய்வு

என் திறனாய்வுக் கருத்துகள் சில, வேறு சிலருடையனவற்றோடு மாறுபட்டிருக்கலாம். யான் தமிழ் எம்.ஏ. தேர்வில் விருப்பப் பாடமாக இலக்கியத் திறனாய்வை