பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

89


மடிந்தனர். மாதவியும் மணிமேகலையும் சிற்றின்பம் இழந்து துறவு பூண்டனர். மதுரை எரி யுண்ணப்பட்டது பேரிழப்பாகும்.

இந்த இழப்புகளுக்குள் கண்ணகி பொய்க்குற்றம் சாட்டப்பட்டுக் கோவலன் இறந்த இழப்பு சிலம்பில் பேரிடம் பெற்றுள்ளது. ஆயர் பாடியில் தீய நிமித்தங்கள் தோன்றின. கோவலன் சாவு கண்ணகிக்கு உணர்த்தப்பட்டது. சாவினும், கள்வன் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டது அவளை மிகவும் வருத்தியது.

துன்பமாலை என்னும் காதையில், கண்ணகியின் துயரம் ஓவியப் படுத்தப்பட்டுள்ளது. அவளது அழுகை (அவல) உரைகள் உள்ளத்தை உருக்கும்.

காதலனைக் காணேன் - ஊதுலையின் உள்ளம் உருகும். அன்பனைக் காண்கிலேன் - வஞ்சமோ - மயங்கும் என் நெஞ்சு. மன்னன் தவறிழைப்ப, யான் அவலம் கொண்டு அழிவதோ? காய் கதிர்ச் செல்வனே! என் கணவன் கள்வனோ? என்றெல்லாம் கூறிப் புலம்பி அரற்றினாள்.

கணவனது உயிரற்ற உடலை நோக்கிக் கதறுகிறாள். நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ? மணிமார்பம் தரை மூழ்கிக் கிடப்பதோ என்று கூறிக் கணவன் உடலைக் கட்டித் தழுவிக் கொண்டாள். இந்த ஊரில் பெண்டிரும் உண்டுகொல் - சான்றோரும் உண்டுகொல் - தெய்வமும் உண்டுகொல் என்று வினவி விம்முகிறாள்.

பாண்டியனிடம் வழக்குரைக்கச் சென்று, வாயில் காவலனை நோக்கி, “வாயிலோயே - அறிவறை போகிய பொறியறு, நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே!” என வாயில் காவலனோடு சேர்த்துப் பாண்டியனைச் சாடுகிறாள். பாண்டியன் முன்சென்று,