பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

சுந்தர சண்முகனார்



'தேரா மன்னா செப்புவ துடையேன்' என்று கூறிப் பாண்டியனைத் திடுக்கிடச் செய்கிறாள். நற்றிறம் படராக் கொற்கை வேந்தே என்று கூறிக் கொதிக்கிறாள். நீர்வார் கண்ணை யார் நீ என்று பாண்டியன் வினவ, தன் நாடு, ஊர், குடி, பெயர் முதலியவற்றின் பெருமையைப் பேசுகிறாள்.

புகாரில் இருந்த ஏழு பத்தினிகளின் வரலாறுகளைப் புகழ்ந்து கூறி, அப்பதியில் பிறந்த யானும் ஒரு பத்தினியே யாமாகில், விடேன், அரசோடு மதுரை யையும் ஒழிப்பேன் என்று வஞ்சினம் கூறுகிறாள். தன் இடக் கொங்கையைத் திருகி எடுத்து நகர்மீது எறிந்து எரியச் செய்யலானாள்.

இறுதியில் கீழ்த்திசை வாயில் கணவனோடு வந்தேன்; மேல்திசை வாயிலில் கணவனின்றிச் செல்கிறேன் என்று கூறிச் சேரநாட்டுப் பகுதியை அடைந்து வாழ்வை முடித்துக் கொண்டு துறக்கம் புகுகிறாள்:

"கீழ்த் திசை வாயில் கணவனொடு புகுந்தேன்
மேல் திசை வாயில் வறியேன் பெயர்கென
இரவும் பகலும் மயங்கினள் கையற்று"
(23:182.184)

என்னும் பகுதி மிகவும் உருக்கமானது.