பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. காப்பியத்தில் கலைகள்

கலைகள் அறுபத்து நான்கு என்பர். இது ஒரு வகை வரையறை. ஆனால், காலந்தோறும் புதுப் புதுக்கலைகள் பூக்கலாம். ஒவ்வொரு கலைக்கென்றும் தனித்தனி நூல்கள் உண்டு. தனி நூல்களிலே கூறப்பட்டுள்ள தன்றி, வேறு நூல்களில் இடையிடையே கலைகள் இடம் பெற்றிருப்பதும் உண்டு. இவ்வகையில், இயல் இசை நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தில் சில கலைகள் பெரிய அளவில் இடம்பெற்றிருப்பதில் வியப்பில்லை. இந்நூலில், இயல் கலையினும் இசைக் கலைக்கும் கூத்துக் (நாடகக்) கலைக்கும் மிக்க இடம் உண்டு.

அரங்கேற்று காதையில், பல்வேறு ஆசிரியர்களின் இலக்கணம், அரங்கின் இயல்பு முதலியவை கூறப்பட்டு உள்ளன. இனி அவற்றைக் காண்பாம்:

1. மாதவியின் ஆடல் பயிற்சி

அகத்தியரின் சாபத்தால் இந்திரன் உலகத்திலிருந்து வந்த உருப்பசியோ என எண்ணும்படி மாதவி திகழ்ந்தாள்; கூத்து, பாட்டு, அழகு ஆகிய மூன்றிலும் குறையாதவள். ஐந்தாம் அகவையில் தண்டியம் பிடித்து ஏழாண்டு பயிற்சி பெற்றபின் பன்னிரண்டாம் வயதில் சோழ மன்னனின் அவையில் அரங்கேற்றம் செய்யப் பெற்றாள்.

2. ஆடலாசிரியன் இயல்பு

1. ஆடலாசிரியன், வகைக் கூத்து - புகழ்க் கூத்து, வேத்தியல் - பொதுவியல், தமிழ்க் கூத்து - ஆரியக் கூத்து