௳
வன்னிமன்னர் சரித்திரம்.
அக்கினிகுல சேரன் சரித்திரம்
சோழ, பாண்டியர்களைப் புராணங்களில் சூரிய குலமென்றும், சந்திர குலமென்றும் கூறுவதைப்போல் சேரனை அக்கினி குலமெனச் சாற்றவில்லையே என்பது சிலரது கருத்து. சேரமான்பெருமாள் நாயனாரது புராணத்திலும் குலசேகரப் பெருமாள் வைபவத்திலும் அக்கினிகுல மென்பது விபரமாய்க் காட்டவில்லை.
சேரர்கள் அங்கி குலாற்பவர் என்பதைப் "பரிதியும் மதியும் வன்னியும் முதலாம் பல்வகைக் குலத்தும் உற்பவித்த நரபதி குழாம்" எனவும், "சூரன் குலத்தோர் குபேரன் குலத்தோர் சுடர்பாகவப்பேரன் குலத்தோர்" எனவும் வரும் வில்லி பாரதத்தாலும்,
ஜீவகசிந்தாமணி இயற்றப்பெற்ற காலத்தில் பாடிய சூளாமணி என்னும் காவியத்தில் சுயம்வரச் சருக்கத்தில்
"மழைக்கரும்புங் கொடிமுல்லை மருங்கேற்
வரம்பணைந்து தடாவி நீண்ட
கழைக்கரும்பு கண்ணீனுங் கரபுரத்தார்
கோமானிக் கதிர்வேற் காளை
யிழைக்கரும்பு மிளமுளையா யெரிகதிரோன்
வழிமருக னிவனி ரீர்ந்தண்
டழைக்கரும்பின் முருகுயிர்க்குந் தாரகலஞ்
சார்ந்தவர்கடவஞ்செய் தாரே"
என்னும் செய்யுளாலும் அறிகின்றோம்.
இதனில் கரபுரம் என்பது சேரர்களின் ராஜதானியான கருவூராகும். எரிகதிரோன் வழி மருகன் என்பது அக்கினிக் கடவுளின் வழித்தோன்றலான சேரன் என்று சங்கநூலும் சாற்றுகின்றது; இதுவுமன்றி, அருணாசல புராணம் பாயிரத்தில்,