முடிவுரை.
“குடைநிழலிருந்து குஞ்சர மூர்ந்தோர்
நடைமெலிந்தோரூர் நண்ணினும் நண்ணுவர்”
என்ற முதியோர் வாக்கின்படி தற்காலம் பரிதாப நிலையை யடைந்திருக்கும் வன்னியர்களுக்கு நூற்பிரமாணங்களும், செப்பேடு சிலாஸாஸன ஆதாரங்கள் பல விருந்தும் கல்வியில்லாக் குறையே பெருங் குறையாக இருக்கிறது. அநேக ஆதிக்கங்களைக்கொண்டு பண்டைக் காலந்தொடங்கி அரசாண்ட ராஜ சந்ததியார்களின் செல்வம் வேற்றரசர் படையெழுச்சியால் கொள்ளை போய்விட்டமையால் கல்வியிழந்தனர்; கல்வி யிழக்கவே பக்தி நாகரிகம் குறைந்தது; பக்தி நாகரிகம் குறையவே வறுமை மேலிட்டது; இதனால் மேற்காட்டிய பல நூற்களிலும், செப்பேடு சிலாசாசனங்களிலும் குறித்துள்ள வன்னிகுல க்ஷத்திரியர்கள் இவர்கள் தானோ? அல்லது வேறு யாவரோவென்று அன்னியர் நினைக்க அவ்வளவு பரிதாபநிலையை யடைந்தனர். இதையெல்லாம் கவனித்தே சென்னைமா நகரிலும், இதர ஜில்லாக்களிலும் வன்னிகுல க்ஷத்திரிய சங்கங்களை ஆங்காங்கு ஏற்படுத்தி அவர்களின் சீர்திருத்தத்தின் பொருட்டுப் பல குலாபிமானிகள் பாடுபட்டு வருகின்றனர். சங்க நோக்கம் எங்கும் பரவி கல்வி, ஒழுக்கம், ஒற்றுமை, கைத்தொழில், விவசாயம், அரசியல் முதலிய துறைகளில் முன்னேற்றமடைந்து, குலதர்மப்படி ஒழுக்க சீலராய் வாழ்ந்து, வன்னிய உலகமெங்கும் புண்ணியம் பெருகி மங்களம் உண்டாக எல்லாம் வல்ல நம் குல தெய்வமாகிய ஸ்ரீ சொர்ணகாமாட்சியம்மனைப் பிரார்த்திக்கின்றோம்.