௳
கடவுள் துணை
கம்பர் வரலாறு
பூமணக்கும் பொழில் மலிந்த தமிழ் நாட்டிலே “சோழவளநாடு சோறுடைத்து” என்றபடி நீர்நில வளங்களாற் சிறந்த சோழமண்டலத்திலே, தஞ்சையை யடுத்த தேரழுந்தூர் என வழங்கும் திருவழுந்தூரிலே கம்பர் வாழ்ந்திருந்தனர் என்பர். கம்பர் வீட்டில் நாடோறும் புதுமட் பாண்டங்களில் சமையல் செய்வது வழக்கமாகையால் பிரதிதினமும் சமையல்செய்த பாண்டங்களைக் கொல்லையில் ஓர் புறத்தில் எறிந்துவந்ததால் நாளடைவில் அவையோர் மேடாயின. கம்பருடைய வாழ்க்கைக்கு அறிகுறியாமாறு இம்மேட்டை எவரும் அழிக்காமல் விட்டதனால் நாளதுகாறும் அதுகெடாது “கம்பர்மேடு” எனவழங்கப்பட்டு வருகின்றது.
இவரைக் கம்பநாடு என்னும் ஒரு சிறு நாட்டையாண்டுவந்த சிற்றரசனுடைய புதல்வர் என்றும், ஒச்சன் வீட்டில் வளர்ந்தவர் என்றும் சிலர் கூறுகின்றனர். தன்மகன் அம்பிகாபதி இராசகுமாரத்தியை இச்சித்ததனால் அரசன் சினந்து அவனைக்கொன்ற காரணம் பற்றிப் பழிக்குப்பழி வாங்கத்தருணம் பார்த்திருந்த இவர் வேட்டையாடும் போது ஒருயானையால் துரத்திவரப்பட்ட அவ்வரச குமாரனைக் “காட்டானை விட்டாலும் கவியானை விடுமா” என்று ஈட்டியால் குத்திக்கொன்றனர் என்றதொரு கதையைக்கொண்டு இவர் க்ஷத்திரியரல்லராயின் அங்ஙனஞ் செய்யத் துணியாரெனச் சிலர் கருதுகின்றனர்.
“ஈடார் தருஞ்சோழ நாடலு றுந்திருவ ழுந்தூரினில்
பீடாரு மோச்சக் குலத்தொருவ னவ்வூர்ப் பெருங்கோயில்வாய்
நாடா னுதிக்குந் தொறுஞ்சென்று சங்கூது நல்வேலையான்
கோடாமலதுசெய்து வருநாளு ளொருநாளிற் கூறாயிடை
கம்பத்தி னருகோர் சிசுக்கண்டு பெருகுங் களிப்போடெடுத்