உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலை எழுபது, 1947.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

மூலமும் - உரையும்


கொச்சகம்

விண்ணவர்க்கு விருந்தினராய் மேவியர மாதரின்பம்
மண்ணின்மரு வலர்மருவ வாழ்விக்கும் பண்ணாடர்
திண்ணமுறு வன்னிமன்னர் திருக்கரத்தி லேந்தியமர்
நண்ணாம்வய வாண்மகிமை நாமெங்ங னவில்வதுவே. (23)

(இ - ள்.) பண்ணாடர் திண்ணம் உறும் வன்னிமன்னர் - தமிழ்நாடரென்னும் (சேர சோழ பாண்டியர்களாகிய) பலத்தை யுடைய வன்னிய வரசர்களது, திருக்கரத்தில் ஏந்தி அமர் நண்ணு வயவாள் - அழகிய கையினிடத்துப் பொருந்தி யுத்தத்தைச் செய்யும் வீரவாளானது, மண்ணின் மருவலர் விண்ணவர்க்கு விருந்தினராய் மேவி- பூவுலகிலுள்ள பகைவர்கள் தேவவுலகத்தவர்களுக்குவிருந்தினராகப் பொருந்தி, அரமாதர் இன்பமருவ வாழ்விக்கும் - அரம்பை முதலிய தெய்வப் பெண்களோடும் இன்பத்தை யனுபவிக்கும்படியான உயர்ந்த வாழ்வைக் கொடுக்கும், (ஆகையால்) மகிமை நாம் எங்ஙன் நவில்வது—(அவ்வீரவாளின்) சிறப்பை நாம் எவ்விதத்திற் சொல்வது. எ-று.

கருத்து. வன்னியர்கள் வீரவாள் பகைவர்களைத் தேவர்களுக்கு விருந்தாளிகளாய் அரம்பை முதலிய தேவ ஸ்திரீகளின் போகங்களை யனுபவிக்கச் செய்யும் என்பதாம்.

வாட்சிறப்புக் கூறினவர் இனி வேற்சிறப்புக் கூறினாராயினர்.


வேல்.


வேலென்பது - வாளோடும் ஒற்றுமையுடையது. அது இனம் நோக்கி வாளின் பின்வைத்துக் கூறினார்.

வேலேந்தியகாலாட்படைச் சிறப்பு.

வேலேந்திய காலாட்படைச் சிறப்பென்பது - வேலா யுதத்தைத் தாங்கிய காலாட்படையின் பெருமை. அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_எழுபது,_1947.pdf/86&oldid=1862725" இலிருந்து மீள்விக்கப்பட்டது