உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலை எழுபது, 1947.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சிலை யெழுபது

81

சீர் ஆழி ஆம்-விசாலமான சமுத்திரமே (ஆகும் ஆகையால்,) அகழின் சிறப்பு உரைப்பவர் எவரே - அவ்வகழியின் சிறப்பைச் சொல்லத்தக்கவர் யாவரே. எ-று.

கருத்து. காஞ்சீபுரியின் மதிலைச்சூழ்ந்த அகழியானது சமுத்திரமே ஆம் என்பதாம்.


அரண் சிறப்பு.

அரண் சிறப்பென்பது:— காவலின் பெருமை. அது அகழியுளடங்கிய காடு மலையாதலின் இங்கே அகழின் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.

சரண்புகுந்தீ சனைச்சான்றோர் தம்முயிரைக் காப்பரெனும்
வரம்புளதங் கதுவியப்பின் மருவியதோர் வழக்கன்றால்
முரண்புகுதோட் செருநர்வரின் மூதுலகோர் வன்னியர்தம்
அரண்புகுந்து தம்முயிர்காத் தமர்ந்திருப்ப ராதலினே. (30)

(இ - ள்.) முது உலகோர் - பழமையான உலகத்தவர்கள், முரண்புகுதோள் செருநர் வரின் - வலிய தோளினையுடைய பகைவர்கள் வருவார்களானால், வன்னியர் தம் அரண்புகுந்து - வன்னியர்களது அரணிற் புகுந்து, தம் உயிர்காத்து அமர்ந்திருப்பார் - தங்களுயிரைக் காப்பாற்றிக்கொண்டு தங்கயிருப்பார்கள், ஆதலின் - ஆதலால், சான்றோர் - பெரியோர்கள், ஈசனைச் சரண்புகுந்து தம் உயிரைக் காப்பர் எனும் வரம்பு உளது - கடவுளை வழிபட்டுத் தங்களுயிரைக் காத்துக் கொள்வார்களென்று சொல்லும் வரம்பு ஒன்றிருக்கிறது, அங்கு அது - அஃதானது, (யாவருக்கும் சாக்ஷியளவையின்மையால்), ஓர் வியப்பின் மருவிய வழக்கு அன்று - ஓர் ஆச்சரியத்தைப் பொருந்திய வழக்கினையுடையதல்ல எ-று.

கருத்து. உலகத்தவர்களுக்குப் பகை நேரிட்ட காலங்களில் வன்னியர்களது அரணைச் சேர்ந்தே தங்களுயிரைக் காத்துக்கொள்ளுகிறார்கள் என்பதாம்.

இதுவரையில் அரண் கூறினவர் இனி அரசு கூறினாராயினார்.


6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_எழுபது,_1947.pdf/93&oldid=1862756" இலிருந்து மீள்விக்கப்பட்டது