பக்கம்:சிவ வழிபாடு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயரான தாயுமானவன் என்ற பெயரையே அவர்தம் இளைய மகனுக்கு வைத்தார். தாயுமானார் திருச்சியில் சிற்றம்பல தேசிகரிடம் கல்வி பயின்றார். மலைக் கோட்டைச் சிவபெருமானிடத்தும், திருவானைக்கா அகிலாண்ட நாயகியிடத்தும், இளமைக்கால முதலே பக்தி பூண்டு வழிபட்டு வந்தார். மலைக்கோட்டையில் வாழ்ந்த மோனகுரு இவரது ஞானாசிரியர் ஆவார். தாயுமானவர் மட்டுவார்குழலி என்னும் மங்கை நல்லாளை மணந்து, சிறிது காலம் இல்வாழ்க்கையை நடத்தினார். அவர்களுக்குக் கனகசபாபதி, என்னும் ஆண்மகவு பிறந்தது. மகவு பிறந்த சில ஆண்டுகளில், மட்டுவார்குழலி அம்மையார் மறைந்தார். தாயுமானாருடைய தமையனார் சிவசிதம்பரம் கனகசபாபதியை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதற்குச் சற்று முன்பே கேடிலியப்பரும் மறைந்தார். அவர் வகித்துவந்த அரசுப் பணியைத் தாயுமானார் ஏற்க நேர்ந்தது. ஏற்ற சிறிது காலத்தில் அரசர் மறைந்தார். அவருக்கு மகப்பேறின்மையால், ஆட்சியை அரசி மீனாட்சி அம்மையார் ஏற்றார். அரசில் ஆளுநராகத் தாயுமானார் பெரும்பொறுப்பில் இருந்த போதும், அவர் மனம் தத்துவ நாட்டத்திலேயே உலக விருப்பில்லாமல் அமைந்தது. தாயுமானாரின் துறவு மனம் அறிந்த மீனாட்சியார் அவர் தனியாகச் செல்ல இசைந்தார். தாயுமானார் தமிழ் நாட்டிலுள்ள புண்ணியத் திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். பிறகு இராமநாதபுரத்துக்குத் திரும்ப வந்து தம்முடைய வாழ்க்கையின் இறுதிப் பகுதியை நிட்டையில் கழித்து, கி.பி. 1783 ஆம் ஆண்டு மண்ணுலக வாழ்வை நீத்தார். அவருடைய திருமேனி, இராமநாதபுரத்துக்கு அருகேயுள்ள இலக்குமிபுரம் என்னும் ஊரில் சமாதி வைத்துத் திருக்கோயில் எழுப்பப் பெற்றிருக்கிறது. 154

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/163&oldid=833452" இலிருந்து மீள்விக்கப்பட்டது