பக்கம்:சீதா கல்யாணம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. அயோத்தி நகரம்

கோசல நாட்டின் பிரதான பட்டணம் அயோத்தி நகரம். எல்லாவிதமான போகங்களும் நிறைந்த வானுலகத்திலேயுள்ள தேவர்கள்கூட இந்த நகரத்தில் வசிக்க விரும்புவார்கள் என்றால், இந்த நகரத்தின் மகத்துவத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? இந்த நகரம் பூமாதேவியின் முகம் போலவும், அவள் முகத்தில் அணியும் திலகம் போலவும், கழுத்தில் அணியும் மாங்கல்யம் போலவும், மார்பில் அணியும் ஆபரணம் போலவும், இலக்குமி வசிக்கக்கூடிய செந்தாமரை மலர் போலவும், திருமால் தன் மார்பில் அணிந்திருக்கும் ஒப்பற்ற ஆபரணமாகிய கவுத்துவ மணியை வைப்பதற்காகச் செய்த ஒரு பொற்பெட்டி போலவும், அத்திருமால் வசிக்கும் வைகுந்தம் போல வும், ஊழிக் காலத்தும் அழியாத ஓர் இடம் போலவும் பொலிவுற்று விளங்குகின்றது. -

நிலமகள் முகமோ? திலகமோ? கண்ணோ?

நிறை நெடு மங்கல நானோ? - இலகு பூண் முலைமேல் ஆரமோ? உயிரின் இருக்கையோ? திருமகட்கு இனிய மலர் கொலோ? மாயோன் மார்பில் நன்மணிகள்

வைத்த பொன் பெட்டியோ? வானோர் உலகின் மேல் உலகோ? ஊழியின் இறுதி

உறையுளோ? யாது என உரைப்பாம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/28&oldid=1367883" இலிருந்து மீள்விக்கப்பட்டது