பக்கம்:சீதா கல்யாணம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் 27

இந்த நகரத்தில் எங்கு பார்த்தாலும் வெண்ணிற மாடங்கள் நிறைந்திருக்கின்றன. இத்தகைய அழகிய மாளிகைகள் மட்டுந்தானா? சிற்றரசர் பலர் வந்து தங்கள் தங்கள் பகுதிப் பணத்தைச் சக்கரவர்த்திக்கு மரக்கால் கொண்டு அளந்து கொட்டுகிற மண்டபம் ஒரு பக்கம், நடன மாதர் ஆடும் நாடக அரங்கம் ஒருபுறம்; வேதியர்கள் இருந்து வேதங்கள் ஓதுவதற் குரிய சாலைகளும், இவற்றிற்கெல்லாம் மேலாகக் கலைகளை ஆராய்ச்சி செய்யும் கலைவல்லவர் கூடும் பட்டி மண்டபமும் இங்கு உண்டு. இவற்றை நாம் தெரிகிறபோது நகரத்தின் செல்வப் பெருக்கையும் கலை வளர்ச்சியையும் அறிந்து கொள்கிறோம்.

மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம், அன்னம் மெல் நடையவர் ஆடும் மண்டபம், உன் அரும் அருமறை ஓதும் மண்டபம், பன் அரும் கலை தெரி பட்டி மண்டபம்.

அந்த நகரத்திலே நிறைந்த கல்வியில்லாதவர்களே இல்லை. ஆதலால், இவர் கல்வியறிவில் அவரை விடத் தேர்ந்தவர்' என்ற முறையில் சொல்வதற்கே இட மில்லை. அங்குள்ள எல்லா மக்களுக்கும் பொருட் செல்வமும் கல்விச் செல்வமும் நிறைந்திருத்தலினால், இவர் பணக்காரர், இவர் ஏழை என்ற பாகுபாடு செய்வதற்கு முடியாதவர்கள் ஆகி விடுகிறோம் என்று அந்த நகரின் சிறப்பைச் சொல்லுகிறார் கம்பர்.

கல்லாது நிற்பார் பிறர் இன்மையின், கல்வி முற்ற வல்லாரும் இல்லை. அவை வல்லர் அல்லாரும் இல்லை; எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை, உடையார்களும் இல்லை, மாதோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/29&oldid=1367886" இலிருந்து மீள்விக்கப்பட்டது