26
சீனத்தின் குரல்
மனைவி இறந்துவிட்டால் கணவன் ஓராண்டு அழுதுகொண்டிருக்க வேண்டும், ஆனால், கணவன் இறந்துவிட்டால், மனைவி, மூன்றாண்டுகள் அழுது கொண்டிருக்க வேண்டும். விதவை மணம் அனுமதிக்கப்படவில்லை, கற்பை தெய்வமென போற்ற வேண்டும், கற்பைக் காப்பாற்றுவதற்காகவே மிங் ஆட்சி காலத்தில் பல சங்கங்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலமாக பெண்களிடம் வீர உணர்ச்சியும், தியாக சிந்தையும் வளருமென நம்பினார்கள். அப்படி. யாரிடமாவது மேற்சொன்ன இரண்டு பண்புகளையும் கண்டுவிட்டால் அவர்களை தெய்வங்களெனப் போற்றினார்கள். இதைப் போன்ற நிகழ்ச்சிகள் தாம் சீன இலக்கியத்தின் முதல் வரி முதல் கடைசி வரி வரையிலும் காணப்படுகின்றன. கடவுளைப்பற்றி கன்பூஷியஸ் எங்கேயும் குறிப்பிடவில்லை. அவர் காலத்துக்கு முன்பிருந்த டாய்ஸ் மதத்திலும் கடவுளைப்பற்றிய குறிப்புகள் ஒன்றும் காணப்படவில்லை. இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தார் கன்பூஷியஸ். அவர் இவ்வளவும் செய்தது பெண் வர்க்கத்தை பழிதீர்க்க வேண்டுமென்ற உணர்ச்சியாலல்ல. ஆண் வர்க்கம் அடிமை மலையடிவாரத்திலும், பெண் வர்க்கம் அதன் உச்சியிலும் இருந்ததால் எட்டாத தூரமாய்விட்டது. இவை இரண்டையும் சம உயர்வில் கொண்டுவர வேண்டுமென்ற சமரச உணர்வால் என்று தெரிகிறது.