பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


சிவகங்கை ராணிக்கு தெரிவித்தார்.[1] இந்த இனிப்பான செய்தியை பெறுவதற்குத் தானே இத்தனை காலமும் காத்திருந்தது!

விருப்பாட்சியில் இருந்து சிவகங்கை புறப்படுவதை திண்டுக்கல் கோட்டை கிலேதார் சையது சாகிபுக்கு ராணியார் தகவல் கொடுத்தார். குறிப்பிட்ட தேதியன்று குதிரைப்படை அணிகளை ஆயத்தம் செய்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார். சிவகங்கை மறவர் அணிகள் திரண்டு புறப்பட்டன. ராணி வேலுநாச்சியாரது மெய்க்காப்பாளரான மருது சேர்வைக்காரர் தலைமையில்,

"எழுந்தது சேனை, சுழலும்
  திரிந்தது பாரின் முதுகு
விழுந்தன கானும் மலையும்
  வெறுந்தரை ஆன நதிகள்"

ஆம்! அந்தப் படையின் சுமை பொறுக்க முடியாமல் நிலத்தின் முதுகு முறிந்தது. படைகளின் வேகத்தில் காடுகளும் மலைகளும் நிலை குலைந்தன என்று பரணி[2]பாடுவது போல இந்த விடுதலைப் படை இரை வேட்ட பெரும் புலி போல சின்ன மறவர் சீமை நோக்கி நடை போட்டது.

வேதனையும் சோதனையும் நிறைந்த எட்டு ஆண்டு வாழ்க்கை ஓடான விருபாட்சி, தம்மை மன்னர் மனைவி என்ற நிலையிலிருந்து மக்கள் தலைவியாக்கிய மகோன்னத தலம், வீடணனனுக்கு அடைக்கலம் அளித்த இராமேசுவரம் போன்ற அந்த விருபாட்சியை நீர் தளும்பிய கண்களுடன் சில நொடிகள் நோக்கினார் ராணி வேலு நாச்சியார், குதிரை மேலிருந்தவாறு!

அடுத்து பஞ்ச கல்யாணி போன்ற அந்தக் குதிரை தெற்கே, திண்டுக்கல் நோக்கி பறந்தது.


  1. Correspondance on Permanent Settlement - 1799 to 1803, P. 33.
  2. கலிங்கத்துப் பரணி பாடல், எண் 359.