பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


ராணியாரது ஒப்புதல் இல்லாமல் பிரதானிகள் செய்தவை அனைத்தையும் நியாயப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் அந்தக் கட்டுக்கதையில் ஒட்டி இருந்தது. நாட்டுத் தலைவர்கள் நல்ல காரியங்களைச் செய்தார்கள் என்று கூறுவது, அந்தத் தலைவர்களுக்கு பெருமையும், புகழையும் சேர்ப்பது ஆகும். இழிந்த செயல்களை இயற்றினார்கள் என்றால் பழியும் பாதகமும்தான் அவர்களுக்கு ஏற்படும். இந்த உண்மைகளை உணராமல் இந்தக் கற்பனைத் திருமணம் எத்தகைய இழிவானது என்பதை சரித்திர புரட்டர்கள் சிந்திக்கவே இல்லை.

அன்று மட்டுமல்ல. இன்றும் ஒரு நூலாசிரியர், நூலாசிரியர்களுக்கு உள்ள பொறுப்புக்களையெல்லாம் புறக்கணித்துவிட்டு, தமது அழுகிய கற்பனையில் கண்ட கனவுக் காட்சியாக, மொட்டைத் தலையுடன் முழங்காலை முடிச்சிடும் பணியைச் செய்துள்ளார். கைம்மை நிலையில் அந்தபுரத்திற்குள் இருந்த கற்புக்கரசி வேலு நாச்சியாருக்கும், ஐந்து மனைவிகளும் எட்டுக் குழந்தைகளும் கொண்ட குடும்பத் தலைவரும், அரிய ராஜ விசுவாசம் கொண்டவருமான பெரிய மருது சேர்வைக்காரருக்கும், புதுமையான திருமணம் ஒன்றைச் செய்து வைத்து அல்ல - எழுதிப் பார்த்து மகிழ்ச்சியுற்று இருக்கிறார், எவ்வித ஆதாரமும் இன்றி.[1]

இந்த திருமணம் உடல் இன்பத்துக்கான திருமணம் அல்லவென்றும் அற்புத ராஜதந்திரத்துடன் கூடிய அரசியல் திருமணம் என்றும் அவர் குறிப்பிட்டு இருப்பது நகைப்புக்குரியது. இந்தப் பெரும் பழியை நேரடியாகச் சுமத்துவதற்குப் பயந்து அந்த ஆசிரியர் மதுரைச் சீமை வரலாற்று ஆசிரியரது 'பூடகமான ஆங்கிலச் சொல்லையும், அந்தச் சொல்லுக்கு, அவருடைய கற்பனைக்கு ஏற்ற பொருள் விரித்து ஆங்கில அகராதிகளையும் துணைக்கு கொண்டிருப்பது பரிதாபத்துக்குரியதாக உள்ளது.

ராணி வேலுநாச்சியாரது கவலை

காளையார் கோவில் போரின் முடிவில் தந்தையை இழந்து தாயார் வேலு நாச்சியாருடன் விருபாட்சி கோட்டைக்குச் சிறுமியாகச் சென்ற வெள்ளச்சி அழகும் பருவமும் ஒருங்கே திரண்ட இளவரசியாக சிவகங்கை வந்தாள். தியாகியான மன்னர் முத்து வடுகநாதத் தேவரது சிவகங்கை சீமை அரியணையில் அமர்த்தப்பட்டு அவளுக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது அல்லவா? இந்த அரிய காட்சியைக் கண்டுகளித்த அவளது தாயார் ராணி வேலுநாச்சியாரது இதயம் மகிழ்ச்சியால் பூரித்தது.


  1. கி. மருது பாண்டிய மன்னர்கள் (1994) பக்; 124-125