பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



7. மருது சேர்வைக்காரர்கள்

முக்குலத்தோரின் ஒரு பிரிவினர் அகம்படியர் எனப்படுபவர்கள். தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் சோழநாடு, கொங்கு நாடு ஆகிய பகுதிகளிலும் இந்த மக்கள் தொகுதியினர் வாழ்ந்து வந்தனர். ஆனால், இவர்கள் மிகுதியாக இராமநாதபுரம், சிவகங்கைச் சீமை மன்னர்களது பணியில் இருந்து வந்துள்ளனர். ஆதலால் இவர்கள் தங்களை செம்பிநாட்டு மறவர்கள் என்று சொல்லிக் கொண்டனர் என ஆசிரியர் தர்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார். மேலும், இறந்து போன மன்னரது சடலத்தை தீர்த்தம் கொண்டு குளிப்பாட்டுதலும், இறந்தவரின் வாரிசு போல இடுகாட்டிற்கு தீச்சட்டி எடுத்துச் செல்லும் உரிமையும் உடையவர்களாகவும் இவர்கள் இருந்தனர். [1] குற்றேவல் முதல் படைக்கலம் தாங்குதல் வரையிலான பல அலுவல்களை, பணிகளை, சேவைகளைச் செய்து வந்த காரணத்தினால் இந்த மக்களது பெயரில் "சேர்வை” என்று சிறப்பு விகுதியும் சேர்ந்து கொண்டது. இந்த மக்களில் பொருளாதார நிலையில் உயர்ந்தவர்கள் “பிள்ளை”ப் பட்டமும் பெற்று இருந்தனர். இதற்கு எடுத்துக் காட்டாக புதுச்சேரி துபாஷ-ம் வள்ளலுமான ஆனந்த ரங்க பிள்ளையையும், சிவகங்கைப் பிரதானி தாண்டவராய பிள்ளையையும் பாதிரியார் பெளச்சி வரைந்துள்ளார்.[2] கள்ளர், மறவர், அகம்படியர், மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆயினர் என்ற ஆன்றோர் வழக்கும் அதை உறுதி செய்கிறது. ஆனால், பதினொன்று, பன்னிரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் இவர்கள் 'அகம்படி முதலி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர்.[3]


  1. Edgar Thurston - Castes and Tribes of South India (1909) Vol. V
  2. Unpublished Manuscripts of Fr. Bouchi of Madurai - Ramnad Diocese.
  3. Rangacharya.K. - Topographical Inscriptions in Madras presidency (1919) wol. IIIP: 1743