பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 95


இராமநாதபுரம் சீமை முக்குளத்தில் பழனியப்ப சேர்வை என்பவருக்கு பிறந்த வெள்ளை மருது, கறுத்த மருது என்று ஆண் மக்கள், பின்னர் பெரிய மருது, சின்ன மருது, என்ற பெயர்களில் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரது அந்தரங்கப் பணியாளர்களாகப் பணியாற்றினர். சிவகங்கை சரித்திரக் கும்மியும், அம்மானையும் இந்த சகோதரர்களின் தந்தையை அடப்பம் வெள்ளைக்காலுடையார் என்று குறிப்பிட்டுள்ளன. செல்வ ரகுநாதன்கோட்டை ஆவணங்களிலும், வெள்ளையக்காலுடையார், சசிவர்ணத் தேவரது அடைப்ப பணியில் இருந்ததைத் தெரிவிக்கிறது. இந்த உடன் பிறப்புகளின் பாட்டியும் மன்னர் சசிவர்ணத் தேவரது அரண்மனையில் பணியாற்றியதாக பெளச்சி பாதிரியாரது ஆய்வுரையில் காணப்படுகிறது. கி.பி.1781-ம் ஆண்டைச் சேர்ந்த சேதுபதி மன்னரது அனுமந்தக்குடி ஒலைச்சாசனம் ஒன்றில் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளவர் "வணங்காமுடி பளநியப்பன் சேர்வை" என்பவர்.[1]

மருது சேர்வைக்காரர்களது தந்தை மொக்கைப் பழனியப்ப சேர்வைக்காரர் சேதுபதி மன்னரிடம் தளபதியாக இருந்து இருக்க வேண்டும் என பொருத்தமற்ற ஊகத்தைப் பற்றிக்கொண்டு மருது சேர்வைக்காரர்களது பாரம்பரியப் பெருமையை நிலைநாட்ட நூலாசிரியர் ஒருவர் முயன்று இருப்பது வியப்பாக உள்ளது. வரலாற்றுப் புகழ் பெற்ற இந்த சகோதரர்கள், தொடக்கத்தில் முத்து வடுகநாதரது அரண்மனைப் பணியாளர்களாக, வேட்டைக்குச் செல்லும்பொழுது, வேட்டை நாய் பிடித்துச் செல்பவர்களாகவும் அடைப்பக்காரர்களாகவும் இருந்தனர் என பல நூலாசிரியர்களால் குறிப்பிடப்பட்டுள்ள இந்த உண்மையை மறைப்பதற்கு, மன்னர் முத்துவடுகநாதர்ஆட்சிக்காலத்தில் இந்த மருது சகோதரர்கள் அரண்மனை சிறுவயல், உறுதிக்கோட்டை என்ற சிற்றுர்களின் ஜமீன்தார்களாக ஆக்கப்பட்டவர் என்றும், கி.பி.1780-ல் ஆற்காட்டு நவாப் ஆட்சியில் இருந்து மீட்கப்பட்ட சில நாட்களிலேயே சிவகங்கைச் சீமையை அவர்கள் ஆளும்படி ராணி வேலு நாச்சியார் விட்டுக் கொடுத்து விட்டார் என்றும் அவர் வரைந்துள்ளார்.[2] இந்த மாபெரும் சரித்திரப் புரட்டினை எழுதுவதற்கு அந்த ஆசிரியருக்கு ஆதாரமாக இருந்த வரலாற்றுச் சான்று எது என்பது தெரியவில்லை. எவ்வித ஆதாரமும் இல்லாமல் அவர் வரைந்துள்ள எத்தனையோ செய்திகளில் இதுவும் ஒன்று எனக் கொள்ள வேண்டியதாக உள்ளது. இதுவரை யாரும் சொல்லாத செய்திகளைச் சொல்லி "சிறப்பு" பெற வேண்டும் என்ற ஆசை போலும்.


  1. வேதாச்சலம்.வெ கல்வெட்டு (தொல்பொருள் ஆய்வுத்துறை இதழ் 18
  2. மருதுபாண்டிய மன்னர்கள் (1991) பக்: 293