பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 97


அங்கீகரித்ததும்[1] ராணி வேலு நாச்சியாரை பதவி விலகுமாறு செய்து சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவரை சிவகங்கை மன்னராக அங்கீகரித்ததும்[2] கி.பி. 1802 பிப்ரவரியில் அவர்நாடு கடத்தப்படும் வரை, வேங்கன் பெரிய உடையாத் தேவரே சிவகங்கை மன்னராக இருந்தார்.[3] என்பதும் வரலாற்று உண்மை.

இந்நிலையில், சிவகங்கை மாமன்னராக மருது சகோதரர்கள் கி.பி.1780 முதல் கி.பி. 1801 வரை தொடர்ந்து இருபத்து ஒரு வருடம் இருந்து வந்தனர் என்று வரைந்து இருப்பது எவ்வளவு பொருத்தமானது என்பது சிந்திக்கத்தக்கது. இந்தப் பெரிய பொய்யான சரித்திரப் புரட்டுக்களைப் புறக்கணித்துவிட்டு மீண்டும் சிவகங்கைச் சீமை வரலாற்றைத் தொடர்வோம்.

புதிய அரசு ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவு பெறும் நிலை. நவாப்பிற்கு சிவகங்கை சீமையில் இருந்து அவரது மேலாண்மையை மதிக்கும் வகையில் செலுத்தப்பட வேண்டிய “பேஷ்குஷ்” தொகையில் ஒரு பணம் கூட சென்னைக்குச் செல்லவில்லை. நவாப் ஆலோசனை செய்தார். வழக்கம்போல் கும்பெனியாரிடம் படை உதவியை நாடினார். ஆனால் சிவகங்கை சீமைக்கு செல்லும் வழியில் உள்ள தஞ்சாவூர் சீமை முழுவதும் மைசூர் மன்னர் ஹைதர்அலியின் ஆக்கிரமிப்பில் அல்லவா உள்ளது? கும்பெனியார் நவாப்பிற்கு உதவ முடியாது காலங்கடத்தி வந்தனர். ஆனால் கி.பி. 1783-ல் திப்பு சுல்தானுடன் பரங்கியர் உடன்பாடு கண்டதால் மைசூர் படைகள் சோழநாட்டில் இருந்து திரும்பப்பெற்றன. இப்பொழுது கும்பெனியார் தளபதி புல்லர்டன் தலைமையில் சில படைப்பிரிவுகளை சிவகங்கைக்கு மேலுரர்வழியாக அனுப்பி வைத்தனர்.

அந்தப் படையணிகள் 4.8.1783-ஆம் தேதியன்று சிவகங்கையை அடைந்தன. மேலுரில் இருந்து சிவகங்கைச்சீமை செல்ல வேண்டிய வழி விவரங்களை தஞ்சையில் இருந்த சுல்லிவனிடமிருந்து பெற்று வந்த தளபதி புல்லர்டன், தமது படைகளில் பெரும் பகுதியை மேலுாரில் தங்கி இருக்குமாறு செய்துவிட்டு, அங்கிருந்து கிழக்கே இருபது கல் தொலைவில் உள்ள சிவகங்கைக்கு ஒரு சிறு அணியுடன் புறப்பட்டுச் சென்றார். இப்பொழுது அந்த தளபதியின் அறிக்கையைப் பார்ப்போம்.

“... தகவல் தெரிந்ததும், இரு மருதுகளும், இளைய ராஜாவை அழைத்துக் கொண்டு காளையார் கோவில் காட்டிற்குள் சென்று விட்டனர். அங்கு பதினாயிரம் பேர்களைத் திரட்டினர். எனது சொல்லை மதித்து ஊருக்கு திரும்பி வருமாறு தெரிவித்தேன்.
  1. Rajayyan. Dr. K. - History of Madura (1974) P: 308
  2. Military Consultations Vol. 155 / 24.1.1792. P: 474
  3. Military Consultations 288 (A) 11.2. 1802 / P: 887-888.