பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


ராணி வேலுநாச்சியாரது கோரிக்கை பொது நிர்வாகம் சம்பந்தப்பட்டதாக இருப்பதால், இதில் தலையிட விரும்பவில்லை என்ற கருத்துரையுடன் இந்தக் கடிதத்தை 21.5.1789ல் சென்னை கவர்னருக்கு தளபதி ஸ்டுவர்ட் அனுப்பி வைத்தார்.[1] தொடர்ந்து போர்ப்பணியில் ஈடுபட்டார். அவரது இலக்கு மருது சேர்வைக்காரர்களை அடக்கி ஒடுக்குவது மட்டும்தானே!

தொடர்ந்து, மதுரை, திருச்சி, தஞ்சை ஆகிய கோட்டைகளில் இருந்து படையணிகள் தளபதி ஸ்டுவர்ட்டின் உதவிக்கு வந்து சேர்ந்தன. ஆதலால் கும்பெனி படைகள் இன்னும் கிழக்கே முன்னேறி காளையார் கோவில் பகுதியிலிருந்தும் மருது சேர்வைக்காரர்களது படைகளைத் துரத்தி அடித்தனர்.[2] அவர்கள் வடக்கே பிரான்மலையை நோக்கி ஓடிய பின்னர், அங்கிருந்து திண்டுக்கல் சீமைக்குள் சென்றுவிட்டனர்.[3] சிவகங்கைச் சீமை வரலாற்றில் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கவிருக்கும் அரசியல் மாற்றத்தை முன்கூட்டி எச்சரிக்கை செய்யும் அடையாள நிகழ்வாக உற்பாதமாக தளபதி ஸ்டுவர்ட்டின் கொல்லங்குடி, காளையார் கோவில் படையெடுப்பும் மருது சகோதரர்களது தோல்வியும் அமைந்துவிட்டது. அடுத்த ஐந்து மாதங்கள் சிவகங்கைச் சீமையில் அமைதி நிலவியது.

சிவகங்கைச் சீமைப் பாதுகாப்பிற்கு ஆங்கிலப் படையணிகள் சிவகங்கை கோட்டையிலும் வடக்கு எல்லைகளிலும் நிலைத்து நின்றன. சீமையில் இயல்பு நிலை நிலவியதால், அவைகள் படிப்படியாக திருச்சிக் கோட்டைக்குத் திரும்பப் பெற்றன. வழக்கம் போல் சிவகங்கை, திருப்பத்தார் கோட்டைகளில் மட்டும் நவாப்பின் படையணி நிலை கொண்டிருந்தது.

மீண்டும் மருதுவின் குழப்பம்

ஐந்து மாதங்களுக்குப் பின்னர், திண்டுக்கல் சீமையில் திரட்டிய பெரும்படையுடன் திரும்பி வந்த மருது சேர்வைக்காரர்கள் திருப்புத்துார் கோட்டையைக் கைப்பற்றினர்.[4] ராணி வேலுநாச்சியாரோ அல்லது ஆற்காட்டு நவாப்பின் அலுவலர்களோ சிறிதும் எதிர்பாராத நிகழ்ச்சி. சிவகங்கைக் கோட்டைப் பாதுகாப்பில் முனைந்து நின்றனர். சென்னைக்கும் தகவல் சென்றது. நவாப் கும்பெனித் தலைமையைத் தொடர்பு கொண்டார். மருது சகோதரர்களை அழிப்பதற்கு மற்றுமொரு படையெடுப்பினைக் கோரினார்.


  1. Military Consultations, Vol.129, P: 1459.
  2. Military Consultations Vol. 130/16.6.1789, P: 1683.
  3. Military Consultations Vol.130/10.11.1799. P: 1792.
  4. Rajayyan. Dr. K. History of Madurai (1794) P. 308