பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 105

இந்தமுறை கும்பெனியார் மிகவும் தயங்கினர். இப்பொழுது மருது சேர்வைக்காரர்கள் மைசூர் மன்னர் திப்புவின் உதவியையல்லவா பெற்று வந்துள்ளனர். கி.பி.1783-ல் திப்புவுடன் செய்து கொண்டுள்ள உடன்பாட்டை மீறுவதற்குரிய நிகழ்ச்சியாகி விடும் என்பது அவர்கள் கருத்து. மருது சேர்வைக்காரர்களுடன் போரைத் தொடங்கினால், அவர்களுக்கு மைசூர் மன்னரது உதவியும் தொடரும் அல்லவா! இந்த எதிர்மறையான சிந்தனையினால் நவாப் அதிர்ச்சியுற்றார். சிவகங்கைச் சீமை அரசியல் என்ன ஆவது? ஏற்கனவே பாக்கி பட்டுப்போன பேஷ்குஷ் தொகை வசூல்? ஒன்றுமே புரியாமல் வாலாஜா முகம்மது அலி, மருது சகேதாரர்களுடன் சமரசம் செய்து கொள்வது என்ற கும்பெனித் தலைமையின் ஆலோசனையை ஏற்றார்.[1]

நவாப்பின் அலுவலர்களும் கும்பெனித் தளபதிகளும் திருப்புத்துருக்கும் சிவகங்கைக்கும் சென்றனர். போர் நிறுத்தத்தை அடுத்து சிவகங்கைச் சீமையில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தி அரசு இயந்திரத்தை எவ்விதம் தொடங்குவது? இதற்கான எத்தனையோ முன் மொழிவுகள், இரு தரப்பினரும் தங்களது நிலையில் இருந்து சிறிதும் விட்டுக் கொடுக்காமல் பேசினர். இருவரது பதவிகளுக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு கூடாது.

மூன்றாவது தரப்பினராக நவாப்பும் கும்பெனியாரும் அவர்களது ஆலோசனையைச் சொன்னார்கள். மருது சேர்வைக்காரர்கள் தொடர்ந்து பிரதானியாக இருந்து வருவது. அவர்களது நடவடிக்கைகளில் வெறுப்புற்ற ராணி வேலுநாச்சியார் சுமுகமான நிர்வாகத்திற்கு உதவும் வகையில் பதவி விலகிக் கொள்ள வேண்டியது. ராணி வேலு நாச்சியாருக்குப் பதிலாக சிவகங்கைச் சீமை அரசராக அவரது மகள் வெள்ளச்சியின் கணவர் சசிவர்ண வேங்கன் பெரிய உடையாத் தேவர் சிவகங்கைச் சீமை மன்னராகப் பதவி ஏற்பது.[2]

இந்தக் கூட்டு யோசனை, ராணிவேலு நாச்சியாருக்கு உகந்ததாக இல்லை. தனது பதவியைப் பறிப்பதற்குப் போட்டதிட்டம் என அவர் எண்ணினார் என்றாலும், தனது மருமகன் தனக்குப் பதிலாக சீமையின் அதிபதி ஆகிறார் என்ற ஆறுதல். வேறுவழியில்லாமல், ராணி வேலுநாச்சியார் இந்த ஆலோசனைகளை ஏற்றார். எதிர்தரப்பும் ஏற்றுக்கொண்டது. நவாப் முகம்மது அலி புதிய சிவகங்கை அரசை அங்கீகரித்தார். ராணி வேலு நாச்சியாரது பத்தாண்டு ஆட்சி கி.பி.1789-ல் டிசம்பரில் முடிவிற்கு வந்தது.


  1. Rajayyan. Dr. K. - History of Madura (1974) P: 308.
  2. Military Consultations Vol. 155/24.1.1792. P.474